ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்: 24 மணி நேரத்தில் 4வது எண்ணெய் கப்பல் விபத்தில் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு!

உலகின் மிக முக்கியமான எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. வளைகுடா நாடுகளிலிருந்து சர்வதேச சந்தைகளுக்குச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்குப் பகுதியில் கடலில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் மோதி எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பிடித்துப் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் கடற்படை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுபோன்று நான்காவது எண்ணெய் கப்பல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விதிமுறை மீறலும் பிரிட்டன் கடல்சார் அமைப்பின் தகவலும்

ஈரான் கடற்படையின் மக்கள் தொடர்புப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கப்பல்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த கடல் பகுதியில் அந்த எண்ணெய் கப்பல் பயணித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கப்பலின் வழிசெலுத்தும் கருவிகள் (Navigation Systems) அணைக்கப்பட்டிருந்ததாகவும், அறிவிக்கப்பட்ட கடல் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாமல் சென்றதாலேயே கண்ணிவெடியில் மோதித் தீப்பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட நான்கு கப்பல்களின் பெயர்கள், அவை எந்த நாட்டின் கொடியுடன் பயணித்தன அல்லது அவற்றில் இருந்த சரக்குகள் குறித்த முழு விவரங்களை ஈரான் வெளியிடவில்லை. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அடையாளம் தெரியாத பொருள் மோதியதில் அதன் எஞ்சின் அறையில் தீப்பிடித்ததாகவும், கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பிரிட்டனின் UKMTO கடல்சார் கண்காணிப்பு அமைப்பு தனியாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரான் கடற்படையின் கடும் எச்சரிக்கை

இந்தத் தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், அச்சுறுத்தல்கள் மூலம் ஒருதலைப்பட்சமாக ஆதிக்கம் செலுத்தும் காலம் முடிந்துவிட்டதாக ஈரான் கடற்படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி இனி சட்ட விதிகளுக்கும் பரஸ்பர மரியாதைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் பகுதியாக இருக்கும் என்றும், இப்பகுதியில் பாதுகாப்பாகப் பயணிக்க விரும்பும் கப்பல்கள் ஈரான் ஆயுதப் படைகளுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் இப்பாதையில் தொடரும் தாக்குதல்களும் கட்டுப்பாடுகளும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.