தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பிரபல பூங்கா ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம்பெற்றுள்ள பல திடுக்கிடும் உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது 17 வயது நண்பருடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, மாலையில் ஓய்வெடுப்பதற்காகப் பூங்காவிற்குள் சென்று அமர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள், தங்களைக் காவல் துறையினர் எனக் கூறிக்கொண்டு அச்சிறுமியின் நண்பரைத் தாக்கியுள்ளனர். மேலும், பூங்காவிற்குள் அமர்ந்திருக்க அனுமதி இல்லை எனக் கூறி, இருவரின் அலைபேசிகளையும் பிடுங்கிக்கொண்டு மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
சிறுமியைத் தனியாக அழைத்துச் செல்ல முயன்றபோது, “நான் வீட்டில் சொல்லிவிட்டுத்தான் வந்தேன், வேண்டுமென்றால் என் அம்மாவிடம் போனில் பேசுங்கள்” என தைரியமாகச் சிறுமி கூறியுள்ளார். ஆனால், அதைப் பொருட்படுத்தாத அந்த கும்பல், துப்பாக்கி மற்றும் கத்திகளைப் பறித்து அச்சிறுமியைக் கடுமையாக மிரட்டியுள்ளது. பின்னர், பூங்காவின் அடர்ந்த இருண்ட பகுதிக்குக் கடத்திச் சென்று, கத்தி முனையில் அச்சிறுமியை மூவரும் அடுத்தடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு, இச்சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் உயிரோடு விடமாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்து இருவரையும் பூங்காவை விட்டு வெளியேற்றியுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த துல்லியமான அடையாளங்களின் அடிப்படையில், குற்றத்தில் ஈடுபட்ட ஆசிஃப், ஹேமந்த் மற்றும் முகேஷ் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.