எந்த மேடை, எந்த நேரம்? பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி சவால்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, சிறப்பு தீவிர திருத்த (SIR) விவகாரம் குறித்துத் திறந்த பொது விவாதம் நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விவாதத்திற்குச் சம்மதிக்க வைக்குமாறு அமித்ஷாவுக்குச் சவால் விடுத்துள்ளார். “எந்த மேடை, எந்த நேரம் என்றாலும் விவாதம் நடத்தத் தயார், பயப்படாமல் மோடிஜியைச் சம்மதிக்க வையுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக அரியானாவில் நடைபெற்ற பாஜக பேரவுக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றமே விவாதத்திற்கான உச்ச மன்றம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சி விவாதங்களைத் தவிர்க்கும் வகையிலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் வெளிநடப்புச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் இரண்டு வெவ்வேறு காணொளிகளைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, அமித்ஷாவின் முரணான கருத்துகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு இடமில்லை என்று ஒருபுறம் கூறிவிட்டு, மறுபுறம் விவாதிக்க அழைக்கிறார்கள் என்று அவர் விமர்சித்துள்ளார். தேர்தல் பட்டியல் திருத்தம் மற்றும் கொள்கை விவகாரங்கள் குறித்துப் பிரதமர் மோடி நேரடியாகத் திறந்தவெளி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று ராகுல் காந்தி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய அரசியலில் இரு தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.