“அநீதிக்கு எதிராக ஒரே மேடையில் இணையுங்கள்!”: ராகுல் காந்தி தொடங்கிய ‘சத்யாகிரகா’ புதிய இணையதளம்!

நாடெங்கிலும் பல்வேறு உரிமைகளுக்காகவும், அநீதிகளுக்கு எதிராகவும் தனித்தனியாகப் போராடி வரும் மக்களின் குரல்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கில் ‘சத்யாகிரகா’ (Satyagraha) என்னும் புதிய டிஜிட்டல் தளத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முறைப்படி தொடங்கியுள்ளார்.

காந்தியடிகளின் சத்தியாகிரகக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், நாடு முழுவதிலும் நடைபெறும் சிறிய மற்றும் பெரிய அளவிலான மக்கள் போராட்டங்களை ஒரே வரைபடத்தில் (Map) காட்சிப்படுத்துகிறது.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், “நாடு முழுவதும் மக்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள்; ஆனால், பெரும்பாலும் அவர்கள் தனியாகவே போராடுகிறார்கள். இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள், தலித்துகள் மற்றும் பெண்கள் என ஒவ்வொரு போராட்டத்திற்கு பின்னாலும் ஒரு கதை உள்ளது. ஆனால், தனித்து உயர்த்தப்படும் குரல்கள் எளிதில் ஒடுக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “உண்மைதான் நமது மிகப்பெரிய ஆயுதம் என்று மகாத்மா காந்தி நமக்குக் கற்பித்தார்; ஆனால், உண்மையின் பக்கம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்பது அதைவிடப் பெரிய ஆயுதமாகும். அநீதிக்கு எதிராகப் போராடும் அனைவரும் ‘rahulgandhi.in/satyagraha’ என்ற இணையதளத்தின் மூலம் வெறும் இரண்டு நிமிடங்களில் தங்களது கதையையும் போராட்டத்தையும் பதிவு செய்யலாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தத் தளத்தின் மூலம் தங்களைப் போலவே பிற பகுதிகளில் போராடி வரும் நபர்களையும், இயக்கங்களையும் மக்கள் கண்டறிய முடியும். மேலும், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக, நாடாளுமன்றத்திலும், தெருக்களிலும், கடிதங்கள் மூலமாகவும் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது எனது பொறுப்பு. மக்களின் குரலாக நான் எப்போதும் நிற்பேன்” என்று ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த புதிய முயற்சி இந்திய அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.