இந்திய அரசியலில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று ரோட்டில் இறங்கி கத்தத் தெரிந்தவர்களுக்கு, பிரச்சனை என்று வரும்போது எஸ்கேப் ஆவதிலும் நிகரற்ற திறமை உண்டு என்பதற்கு ராகுல் காந்தியின் இந்த லேட்டஸ்ட் வெளிநாட்டுப் பயணம் அப்பட்டமான சான்று! நாட்டில் எதிர்க்கட்சிகளின் பெயரால் ஆர்ப்பாட்டங்களும் சலசலப்புகளும் உச்சத்தில் இருக்கும்போதே, ராகுல் காந்தி அமைதியாக வியட்நாமுக்கு விமானம் ஏறியுள்ளது தற்போது இந்திய அரசியலில் கொளுந்துவிட்டு எரியும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தலைநகரில் தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம், வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம் என களம் சூடுபிடித்திருக்கிறது. ஆனால், இந்த நாடகங்களை அரங்கேற்றிவிட்டு, ராகுல் காந்தி மட்டும் நேராக வியட்நாம் செல்லும் விமானத்தில் ஜாலியாக அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்களும், ஆளும் பாஜக தரப்பும் சும்மா இருப்பார்களா? “பொய் பேசிப் பேசிச் களைச்சுப் போச்சு… சும்மா வியட்நாம்ல போய் கொஞ்ச நாள் சுத்திட்டு வரோம், யாருக்குத் தெரியப் போகுது?” என்று பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ராகுலை மரண பதம் பார்த்துள்ளது.
பாஜக கோவா மாநிலப் பிரிவு இன்னும் ஒருபடி மேலே போய், “கோவா காங்கிரஸ் நடத்திய ஃப்ளாப் யாத்திரையைப் பார்த்துச் சந்துக்குள்ளேயே கலைச்சுப் போய் உக்காந்திருக்காரு நம்ம கோமாளி” என்று வார்த்தைகளால் விளாசியுள்ளது. அதோடு நில்லாமல், “இந்தியாவில் குழப்பத்தை உண்டாக்குவது, சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைப்பது, நேரா லீவுக்கு ஓடிப்போவது – இதுதான் இவரோட ஃபுல்-டைம் ஜாப் ப்ரொஃபைல்” என்று பாஜக அம்பலப்படுத்தியுள்ள விதம் நரம்புகளை முறுக்கேற்றும் வகையில் அமைந்துள்ளது.
இதற்கிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒரு பொறுப்பான நபர் இப்படி அடிக்கடி யாருக்கும் சொல்லாமல் வெளிநாடு பறப்பது எதற்காக? யார் செலவில் இந்த விசிட்டுகள் நடக்கிறது? என்று பாஜக எம்பி பிரவீன் கண்டேவால் எழுப்பிய கேள்விகள் சாதாரணமானவை அல்ல. “இந்தியாவில் ஒரு சர்ச்சையைக் கொளுத்திப் போட்டுவிட்டு ஓடிப் போய்விடுவதுதான் இவருடைய பிசினஸ் மாடல்; கடந்த 2-3 ஆண்டுகளில் இவர் எங்கு சென்றார், யாரைச் சந்தித்தார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இவருக்கு உண்டு” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டைத் தீய்த்துக் கொளுத்துவதுபோல் பேசிவிட்டு, போராட்டங்களை நடுவழியில் கழட்டிவிட்டு வெளிநாட்டுக்குப் பறக்கும் இந்த ‘பகுதி நேர அரசியல்’ கலாச்சாரத்திற்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படும்? போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்டுவிட்டுத் தாங்கள் மட்டும் ஜாலியாக வெளிநாட்டுத் தீவுகளில் பொழுதைப்போக்கும் தலைவர்களை மக்கள் இனியும் தட்டிக் கேட்காமல் இருக்கப் போவதில்லை!