இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் வாயிலாகச் சிறுவர்கள் தொடர்பான சட்டவிரோத ஆபாச உள்ளடக்கங்களைப் (CSEAM) பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் மாநிலச் சைபர் கிரைம் காவல்துறை தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 15,326 மொபைல் எண்கள், ஏறத்தாழ 7,800 இணையதள இணைப்புகள் (URLs) மற்றும் சமூக வலைதளக் கணக்குகள், மேலும் 100 மின்னணு சாதனங்களை அதிரடியாக பிளாக் செய்து காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
இது குறித்துச் சைபர் கிரைம் கூடுதல் தலைமை இயக்குநர் (ADGP) வி. கே. சிங் கூறுகையில், ஆன்லைனில் சிறுவர்கள் தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கங்கள் பரப்பப்படுவது குறித்துப் பெருமளவிலான புகார்கள் மற்றும் தகவல்கள் தொடர்ச்சியாகப் பெறப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார். அந்தப் புகார்களைச் சைபர் நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து, டிஜிட்டல் தடயங்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுபோன்ற கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்குக் கடுமையான சட்டத் தண்டனைகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் பல்வேறு சமூக வலைதள செயலிகளில் ரகசியக் குழுக்கள் மற்றும் பிரத்யேக சேனல்களை உருவாக்கி, இந்தச் சட்டவிரோதப் பதிவுகளை அதிக அளவில் பகிர்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான சமூக வலைதளங்களின் மூலம் முகவரி தெரியாத நபர்களுடன் முதலில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் இவர்கள், பின்னர் அவர்களைத் தங்கள் ரகசியக் குழுக்களுக்குள் அழைத்துச் சென்று உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதுபோன்ற சட்டவிரோத உள்ளடக்கங்கள் ஆன்லைனில் தென்பட்டால் அவற்றை மக்கள் எக்காரணம் கொண்டும் பதிவிறக்கம் (Download) செய்யவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற அத்துமீறல்கள் குறித்துத் தெரியவந்தால் உடனடியாக தேசியச் சைபர் கிரைம் உதவி எண்ணான 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.