ராயல் என்பீல்ட் நிறுவனம் நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. நேரடியாக ராயல் என்பீல்ட் பெயரில் வராமல், இதற்கென ‘Flying Flea’ (பிளையிங் பிளீ) என்ற தனி துணை பிராண்டை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பிராண்டின் கீழ் வெளிவந்துள்ள முதல் மாடல் FF-C6 என்று பெயரிடப்பட்டுள்ளது.
1940-களில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இலகுரக பைக்குகளின் டிசைனைத் தழுவி இந்த புதிய எலக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் உள்ள ‘கிர்டர் போர்க்’ (Girder Fork) முன்பக்க சஸ்பென்ஷன், பழைய காலத்து ராயல் என்பீல்ட் பைக்குகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு அதிநவீன எலக்ட்ரிக் வாகனமாகும்.
View this post on Instagram
இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்து… பார்க்கையில், இதில் பிரத்யேகமான ‘EV Operating System’ பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பைக்கின் செயல்திறனைத் தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்தும். மேலும், வளைவுகளில் திரும்பும்போது கூடுதல் பாதுகாப்பு தரும் ‘Lean-angle sensitive ABS’ வசதி மற்றும் பல்வேறு ரைடிங் மோட்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
விலை மற்றும் விற்பனை எப்போது… என்ற கேள்விக்கு, ராயல் என்பீல்ட் இன்னும் அதிகாரப்பூர்வமான விலை பட்டியலை வெளியிடவில்லை. இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த பைக்குகள் இந்திய சாலைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப விலையாக இது சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
லைட்வெயிட் அலுமினியம் பிரேம் மற்றும் கச்சிதமான பேட்டரி பேக் மூலம் நகரப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் செல்லும் என்ற அதிகாரப்பூர்வ மைலேஜ் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ராயல் என்பீல்ட் பாரம்பரியம் மாறாமல், சத்தமில்லாத எலக்ட்ரிக் பயணத்தை விரும்பும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்த பைக் களமிறக்கப்பட்டுள்ளது.