அம்பாசமுத்திரத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம்.. சீமானுக்கு ஆதரவாக வீதிக்கு வந்த போஸ்டர்கள்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. எதிர்வரும் இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் நேரடியாகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரப் பணிகளை தற்போதே முடுக்கிவிட்டுள்ளனர்.

பொதுமக்களின் பார்வையைக் கவரும் வகையில் ஒட்டப்பட்டுள்ள அந்தப் போஸ்டர்களில், “சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி” என்ற வாசகங்கள் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான விவசாயி சின்னத்திற்கு வாக்களித்துச் சட்டமன்றத்திற்குள் தமிழர்களின் குரலை எதிரொலிக்கச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சிக்குக் கணிசமான ஆதரவு இருக்கும் நிலையில், சீமானின் இந்த நேரடிப் போட்டி அப்பகுதியில் கூடுதல் அரசியல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டுத் கணிசமான வாக்குகளைப் பெற்ற போதிலும், சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு தள்ளிப்போனதால், இம்முறை அம்பாசமுத்திரம் தொகுதியை உறுதியான தளமாகக் கொண்டு களமிறங்க நாதக திட்டமிட்டுள்ளது. இந்த சுவரொட்டிப் பிரச்சாரம் அப்பகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, பிற அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.