அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! 6-8 ஆம் வகுப்புகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், அவர்கள் பசியின்றி கல்வியில் முழு கவனத்தையும் செலுத்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும் பயனடையும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் இலவச காலை உணவுத் திட்டத்தின்’ விரிவாக்கத் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை திருவான்மியூரில் உள்ள காந்தி கிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். விழாவின் போது, பள்ளிக் குழந்தைகளுக்குத் தனது சொந்தக் கரங்களால் சூடான சத்தான உணவைப் பரிமாறிய முதலமைச்சர், மாணவர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தார். தொடக்க விழாவிற்குப் பின்னர் வகுப்பறைகளுக்கு நேரில் சென்ற அவர், மாணவர்களின் கற்றல் சூழல் குறித்துக் கேட்டறிந்து உரையாடினார்.

‘பெருந்தலைவர் காமராஜர் இலவச காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயனடைவார்கள்.

நடப்பு நிதியாண்டில் இத்திட்ட விரிவாக்கத்திற்காகக் கூடுதலாக ரூ. 217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காலை உணவுத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 724 கோடியாக உயர்ந்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, பள்ளி வருகையை அதிகரிக்கவும் இத்திட்டம் பெரும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.