TNEA 2026 ஆண்டிற்கான பொறியியல் தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ! 53 பேர் 200/200 கட் ஆப் எடுத்து சாதனை: டாப் 5 ரேங்க் லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) மாணவர் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ தரவரிசை பட்டியலை (TNEA Rank List 2026) உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தற்பொழுது வெளியிட்டுள்ளார். பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக இந்த ஆண்டு விண்ணப்பித்திருந்த 2,45,235 மாணவர்களின் மதிப்பெண் தகுதியின் அடிப்படையில் இந்த ரேங்க் லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ தரவரிசை மற்றும் கட் ஆப் மதிப்பெண்களை tneaonline.org என்ற இணையதள முகவரியில் லாகின் செய்து உடனே அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தரவரிசை பட்டியலில் மாணவர்கள் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, 200-க்கு 200 முழு கட் ஆப் மதிப்பெண்களை (Perfect 200/200 Cut-off) மொத்தம் 53 மாணவர்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்த 200/200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்களில் 39 மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் (State Board) கீழ் படித்துப் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில பாடத்திட்ட மாணவர்கள் இந்த முறை பொறியியல் கட் ஆப்பில் தங்களது ஆதிக்கத்தை பெருமளவில் செலுத்தியுள்ளனர்.

மாநில அளவிலான தரவரிசையில் முதல் 5 இடங்களைப் பிடித்த சாதனையாளர்களின் விவரங்களையும் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்‌ஷிதா மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். திருப்பூரைச் சேர்ந்த ரோகித் பாலன் இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்ஷிதா நான்காம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தன் ஐந்தாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக மாணவர்களுக்கான கலந்தாய்வு (Counseling) தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.