குரூப்-4 தேர்வர்களுக்கு நற்செய்தி.. விண்ணப்பிக்க நவம்பர் 8 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைய இருந்த நிலையில், தேர்வாணையம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனைத்துப் பிரிவு தேர்வர்களுக்கும் வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் கூடுதல் தேர்வர்கள் பயனடையும் வகையில், விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு இதுவரை 9.80 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தி, தகுதியுடைய நபர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி வரும் ஜனவரி 10-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.