“சினிமா வசனம் பேசும் முதல்வர் விஜய்!” – தினகரன் காரசார சாடல்! கும்மிடிப்பூண்டி கொடூரத்தால் வீதியில் இறங்கி போராடத் தயங்காது திமுக! உதயநிதி எச்சரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரச் சம்பவம், தமிழக அரசியலில் தற்பொழுது ஆளும் தவெக அரசுக்கு எதிராக மிகப்பெரிய சண்டையாக வெடித்துள்ளது. இந்த மனிதநேயமற்ற சம்பவத்திற்குத் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மிகக் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் வென்டிலேட்டரில் இருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்குக் குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் விஜய் பிறப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாநிலத்தில் இனியும் இதுபோன்ற கொடூரமான குற்றச்சம்பவங்கள் தொடருமேயானால், தங்களது திமுக தலைவரின் அனுமதியைப் பெற்று, ஒட்டுமொத்த பொதுமக்களையும் திரட்டி தவெக அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடவும் திமுக ஒருபோதும் தயங்காது என்று மிக நேரடியான எச்சரிக்கையையும் உதயநிதி விடுத்துள்ளார். தேர்தல் சமயத்தில் குழந்தைகளைத் தேர்தல் கருவியாகப் பயன்படுத்திய முதல்வர் விஜய், தற்பொழுது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாக அவர் சாடியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கரூருக்குப் போக முதலமைச்சருக்கு 100% உரிமை இருக்கு! திமுகவை அலறவிட்ட சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!

மறுபுறம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மையைச் சினிமா பாணியில் விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என முதலமைச்சர் விஜய் கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வெறும் வசனங்களை மட்டுமே பேசி வருவதாக அவர் சாடியுள்ளார். ‘சினிமாவில் பேசுவது போல’ மேடைகளில் பஞ்ச் டயலாக் பேசும் முதலமைச்சர், தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தினகரன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.