“ஸ்டாலின் சேர்த்த வாக்குகளை உதயநிதி அழிக்கிறார்!”: மாணிக்கம் தாகூர் கடும் தாக்குதல் – தமிழக அரசியலில் பரபரப்பு!

திமுகவின் தலைவர் மற்றும் முன்னாள்  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறுகச் சிறுக கஷ்டப்பட்டுச் சேர்த்த திமுகவின் பெண்கள் வாக்கு வங்கியை, உதயநிதி ஸ்டாலின் தனது வரம்பற்ற பேச்சுக்களால் சிறுகச் சிறுக இழக்கச் செய்து வருவதாகக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், திமுகவின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் இடைத்தேர்தல் வாய்ப்புகள் குறித்துத் தனது காட்டமான கருத்துக்களைப் பதிவு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவிற்குப் பெண்களின் ஆதரவைச் சேர்த்துக் கட்சியின் பலத்தை உயர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அவதூறான மற்றும் நாகரிகமற்ற வார்த்தைகளைப் பேசி, அந்தப் பெண்கள் வாக்கு வங்கியை மொத்தமாகச் சிதைத்து வருகிறார். பெண்களின் வாக்குகள் இல்லை என்றால், வரவிருக்கும் தேர்தலில் திமுக நிச்சயம் 3-வது இடத்திற்குத் தள்ளப்படும்” என்று எச்சரித்தார்.

மேலும், கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம் குறித்து திமுகத் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதைக் சுட்டிக்காட்டிய அவர், “எந்தக் கட்சிக்கு என்ன பலம் இருக்கிறது என்று திமுக மேடைகளில் கேள்வி எழுப்பி வருகிறது. வரும் 9-ஆம் தேதி தேர்தல் பெட்டி திறக்கப்படும்போதுதான் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்ற உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரியவரும்” என்று அழுத்தமாகக் கூறினார்.

தமிழக அரசியலில் கூட்டணி மற்றும் வாக்கு வங்கி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவரின் இந்த அதிரடிப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.