UP Amends Senior Citizen Rules: “பெற்றோரை கவனிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற்றம்!” – உபி அரசின் அதிரடி புதிய சட்டத் திருத்தம்!

வயதான பெற்றோரை அன்புடன் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதுடன், அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் பிள்ளைகளுக்குக் கடிவாளம் போடும் வகையில் உத்தரப் பிரதேச அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. முதிய பெற்றோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் தங்களின் சொந்த வீட்டிலேயே கண்ணியமாக வாழ்வதை உறுதிசெய்யவும் ‘உத்தரப் பிரதேச பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நல விதிகளில்’ (Maintenance and Welfare of Parents and Senior Citizens Rules) புதிய திருத்தங்களுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய சட்ட விதிகளின்படி (Rules 22-A, 22-B, 22-C), தங்களைக் சரியாகப் பராமரிக்காத, துன்புறுத்துகின்ற அல்லது அவமரியாதையாக நடத்தும் பிள்ளைகள் மற்றும் வாரிசுகளைத் தங்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப் பெற்றோருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோரால் எழுதி வைக்கப்பட்ட சொத்துரிமைகளை ரத்து செய்யவும், அவர்களைச் சொத்திலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கவும் (Disinherit) இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முதியோர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் (District Magistrate / Maintenance Tribunal) நேரடியாகப் புகார் அளிக்கலாம். புகார் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் மனு மீதான விசாரணையை முடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. வெளியேற்ற உத்தரவை அமல்படுத்தத் தவறினால், உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் வீட்டை மீட்டு முதியோரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  The Pre-Wedding Heist!: சக ஊழியர்களுக்கு பார்ட்டி கொடுத்து சாவியை திருடிய ஊழியர்! காசியாபாத் தனிஷ்க் கிளையில் ரூ.4 கோடி நகைகள் அள்ளிய கும்பல் சிக்கியது!

நேரில் சென்று புகார் அளிக்க முடியாத முதியோருக்காக விரைவில் பிரத்யேக இலவச தொலைபேசி எண் (Toll-Free Helpline) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய அதிரடிச் சட்டத் திருத்தம் முதியோர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதோடு, குடும்ப அமைப்பில் பெற்றோரை மதித்துப் பராமரிக்கும் பொறுப்புணர்வை பிள்ளைகளிடம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.