விஜய்யிடம் வைகோவின் மெமோரண்டம்!: “க்ரீன் காப்பர் என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை மீண்டும் கொண்டு வர சதி!” முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வைகோ பகிரங்க எச்சரிக்கை!

தூத்துக்குடியில் ஒட்டுமொத்த மக்கள் மற்றும் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு நிரந்தரமாக மூடப்பட்ட வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நச்சாலை, தற்பொழுது ‘க்ரீன் காப்பர்’ (Green Copper) என்ற மாற்று வடிவத்தில் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் நுழைய முயல்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தக் கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ் மற்றும் ஆங்கில வடிவிலான விரிவான கோரிக்கை மனுவை (Memorandum) அளித்துள்ளார்.

முதலமைச்சரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தனது 3 தசாப்த கால சட்டப் போராட்டப் பின்னணிகளைப் பகிர்ந்துகொண்டார். “உலகக் கோடீஸ்வரரான அனில் அகர்வால், முதலில் கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்தத் தாமிர ஆலையை நிறுவ முயன்றார். ஆனால், அங்குள்ள அரசுகள் அனுமதி மறுத்த நிலையில், தமிழ்நாட்டில் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்து வெறும் ஒரே வாரத்திற்குள் உரிமம் (License) பெற்று இந்த நாசகார நச்சாலையைத் தூத்துக்குடியில் நிறுவினார். அன்றிலிருந்து இன்று வரை மீனவர்களுடனும் விவசாயிகளுடனும் இணைந்து நடைப்பயணம், மறியல், உண்ணாவிரதம் எனப் பல போராட்டங்களை நாம் நடத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தரப்பில் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதாடிய போது, தான் நேரில் ஆஜராகி 7.5 மணி நேரம் வாதங்களை எடுத்து வைத்து ஆலையை மூடச் செய்ததாகவும், பின்னர் உச்ச நீதிமன்றத் தடையாணைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் மீண்டும் 3.5 மணி நேரம் வாதாடி ஆலையை நிரந்தரமாக மூட வைத்த வரலாற்றுப் பின்னணியை விவரித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு விழுந்த திடீர் அதிர்ச்சி! வீடியோ கான்பரன்ஸ் கோரிக்கை நிராகரிப்பு... சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 தேதிக்கே அதிரடி ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

தொடர்ந்து பேசிய வைகோ, “இன்று வேதாந்தா குழுமம் உலகளவில் பல நாடுகளால் பிளாக்லிஸ்ட் (Blacklisted) செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி சிப்காட்டில் (SIPCOT) உள்ள 399 ஏக்கர் நிலத்தை 99 வருட லீஸிற்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே அவர்கள் வாங்கிவிட்டனர். அந்த லீஸை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டாலும், அதற்குத் தடையாணை பெற்று வழக்கு நடத்துகிறார்கள். அந்த வழக்கிலும் நான் தற்பொழுது இணைந்து வாதாடத் திட்டமிட்டுள்ளேன். தற்பொழுது அனில் அகர்வால் இந்த ஆலையை ‘க்ரீன் காப்பர்’ என்ற புதிய பெயரில் மாற்று வடிவத்தில் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக அவர் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்து அனுமதி பெற முயலலாம். அதற்கு இந்தத் தவெக அரசு எவ்வித இடமும் கொடுத்துவிடக் கூடாது” என்று கறாராக வலியுறுத்தினார். இத்தொழிற்சாலை 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கு விவசாயத்தைப் பாழ்படுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட சர்வ நோய்களையும் உருவாக்குவதால், புதிய அரசு எக்காரணம் கொண்டும் இதனை அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக வைகோ தெரிவித்தார்.