சர்வதேச அளவில் மிக நெருங்கிய ராணுவ மற்றும் உளவுத்துறை கூட்டாளிகளாகக் கருதப்படும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே, தற்பொழுது முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய ராஜதந்திர உளவு விவகாரம் வெடித்து உலகையே அதிரவைத்துள்ளது. ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) மிக முக்கிய உயர் அதிகாரிகளின் அலைபேசிகள் மற்றும் ரகசியத் திட்டங்களை இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறையின் சமீபத்திய ஆய்வுகள் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் (The New York Times) மற்றும் என்பிசி நியூஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்தி சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களின்படி, ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் நியமித்துள்ள முதன்மை தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff), பென்டகனின் கொள்கை அதிகாரி எல்ப்ரிட்ஜ் ஏ. கோல்பி (Elbridge A. Colby) மற்றும் அவரது துணை அதிகாரி மைக்கேல் பி. டிமினோ (Michael P. DiMino IV) ஆகியோரின் அசைவுகளை இஸ்ரேல் உளவு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளன. இஸ்ரேலில் தங்கியிருந்த அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மொபைல் போன்களில், அவர்களின் உரையாடல்களை ரகசியமாகக் கேட்கக்கூடிய உளவு மென்பொருள்கள் (Spy Software) அத்துமீறி நிறுவப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் காரணமாக, அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பான டிஐஏ (DIA), இஸ்ரேல் மூலம் அமெரிக்காவிற்கு இருக்கும் உளவு ஆபத்துக்கான எச்சரிக்கை அளவை “உயர்” (High) பிரிவிலிருந்து வரலாற்றுச் சாதனையாக “மிகவும் ஆபத்தானது” (Critical) என்ற உச்சகட்ட நிலைக்கு மாற்றியுள்ளது.
அமெரிக்காவின் இந்த ரகசிய உளவு நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ள வாஷிங்டனில் உள்ள இஸ்ரேிய தூதரகம், “இஸ்ரேல் தனது எதிரிகளை மட்டுமே உளவு பார்க்குமே தவிர, தங்களின் உயிர் தோழனான அமெரிக்க அதிகாரிகளையோ அல்லது அவர்களின் அரசு நிறுவனங்களையோ ஒருபோதும் உளவு பார்ப்பதில்லை. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளை மாளிகை அதிகாரியும் இந்த உளவு விவகாரச் செய்தியை முற்றிலுமாக மறுத்து, இது உண்மைக்குச் புறம்பான தகவல் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவை எட்ட நினைப்பதும், ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் அரசை முற்றிலும் ஒடுக்க நினைப்பதும் தான் இந்த உள்குத்து உளவு வேலைகளுக்குக் காரணம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான எதிர்கால ராணுவ ரகசியப் பகிர்வுகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம் எனத் தெரிகிறது.





