மேற்கு ஆசியப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்க-ஈரான் போர் பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டுப் பேச்சுவார்த்தையாளர்கள் மூலம் 60 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒரு ஆரம்பக்கட்ட கூட்டறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாதான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாகக் கையெழுத்திடவில்லை.
இந்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகையின் மிக ரகசியமான ‘சிச்சுவேஷன் ரூமில்’ டிரம்ப் தனது உயர்மட்ட ஆலோசனைக் குழுவுடன் அவசர சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் டிரம்ப் நடத்திய இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்தின் முடிவில் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் பிரத்யேகமாக வெளியிட்ட தகவலில், “அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நலன்களுக்கு உகந்த மற்றும் தனது கடுமையான நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் ஒப்பந்தத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வார்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, “ஈரான் நாடு எக்காரணம் கொண்டும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது” என்பதில் அமெரிக்கா மிகவும் உறுதியாக உள்ளது.
மேலும், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ ஈரான் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்பதும், கடந்த காலங்களில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பதும் டிரம்ப் தரப்பின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக ஒப்பந்தப் புள்ளிகள் எட்டப்பட்டாலும், அதில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகள் மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே அதிபர் டிரம்ப் இதில் எப்போது கையெழுத்திடுவார் என்பதை தற்போதைக்குக் கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக இறுதி செய்யவில்லை என்று ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் தனது எக்ஸ் தளத்தில், “வார்த்தைகள் மீதோ அல்லது எழுத்துப்பூர்வ வாக்குறுதிகள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை; அமெரிக்காவின் செயல்களைப் பார்த்தே அடுத்தகட்ட முடிவை எடுப்போம்” என்று காரசாரமாகப் பதிவிட்டுள்ளார். இதனால் மேற்கு ஆசியப் பகுதியில் தற்காலிக அமைதி திரும்புமா அல்லது மீண்டும் போர் வெடிக்குமா என்ற உச்சக்கட்ட பதற்றம் உலக நாடுகளிடையே தற்பொழுது நிலவி வருகிறது.





