ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு பின் டெல்லியில் திடீர் திருப்பம்! பிரிக்ஸ் மாநாட்டில் அஜித் தோவல் அதிரடி பேச்சு வார்த்தை! கச்சா எண்ணெய் மற்றும் சபஹார் துறைமுகப் பணிகளுக்குப் புதிய விடிவுகாலம்? மேற்கு ஆசியாவில் புதிய அமைதி திருப்பம்!

இந்தியாவின் தலைமையில் புதுடெல்லியில் இன்று தொடங்கிய 16-வது பிரிக்ஸ் (BRICS) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தின் இடையே, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் கதீர் நெஜாமிபூர் (Ghadir Nezamipour) ஆகியோருக்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தத்திற்குப் பின் முதல் சந்திப்பு: கடந்த ஜூன் 17 அன்று சுவிட்சர்லாந்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தைக்குப் பின், இரு நாடுகளும் மேற்கு ஆசியாவில் பதற்றத்தைத் தணிப்பதற்காக 14 அம்சப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஈரானில் இருந்து புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள முதல் மிக உயரிய பாதுகாப்பு அதிகாரி கதீர் நெஜாமிபூர் ஆவார். இந்தச் சூழலில், அவருடன் அஜித் தோவல் நடத்திய சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள குறிப்பில், “பிரிக்ஸ் மாநாட்டின் இடையே நடைபெற்ற இந்த சந்திப்பில், மேற்கு ஆசியாவின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் குறித்து இரு தரப்பும் விரிவாக ஆய்வு செய்தன. மேலும், பிரிக்ஸ் கூட்டமைப்பின் கீழ் கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இந்தியா-ஈரான் இடையிலான இருதரப்பு மூலோபாய உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  [ராணுவ ஹெலிகாப்டரில் வினாத்தாள்]: லீக் ஆகாமல் தடுக்க வரலாறு காணாத பாதுகாப்பு! நெல்லைக்கு பறந்து வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்! வங்கிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல்!

இந்தியாவிற்கு என்ன லாபம்? அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள இந்த இணக்கமான சூழலை இந்தியா மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதன் மூலம் ஈரானின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டால், இந்தியா மீண்டும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் (Iranian Oil) வாங்குவதைத் தொடங்குவதோடு, டெல்லிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுக (Chabahar Port) மேம்பாட்டுத் திட்ட பணிகளையும் எவ்வித தடையுமின்றி வேகமாக முன்னெடுக்க முடியும். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் சபஹார் துறைமுகத்திற்கு வழங்கியிருந்த பொருளாதாரத் தடை விலக்கை அமெரிக்கா ரத்து செய்திருந்த நிலையில், தற்போதைய புதிய அமைதி ஒப்பந்தம் இந்தியாவிற்குப் பெரும் சாதகமாக அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது.

பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டம்: இதன் தொடர்ச்சியாக, ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஹரியானா மாநிலம் குருகிராமில் இந்தியாவின் தலைமையில் 11-வது பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டம் (BRICS Energy Ministers’ Meeting) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க ஈரானின் பெட்ரோலியத்துறை அமைச்சர் மொஹ்சின் பக்நேஜாத் மற்றும் அந்நாட்டின் துணை எரிசக்தி அமைச்சர் ஆகியோர் இந்தியா வரவுள்ளனர். இக்கூட்டம் சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “நான் இந்தியாளாவே சாகணும்!” அமெரிக்க குடியுரிமையை தூக்கி எறிந்த 94 வயது பாட்டி! நெகிழ வைக்கும் பின்னணி! அமெரிக்காவில் செட்டில் ஆன டாக்டர் மகன்! கணவர் மறைவுக்குப் பின் யுஎஸ் சென்ற பாட்டிக்கு வந்த திடீர் ஆசை! பாபட்லா கலெக்டரேட்டில் நடந்த உருக்கமான சம்பவம்!

மேலும், இன்றைய பிரிக்ஸ் மாநாட்டின் இடையே எத்தியோப்பியாவின் தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு சேவையின் பகுப்பாய்வு நிர்வாக இயக்குனர் மில்லியோன் லெமா தடிஸ்ஸே (Million Lema Tadesse) அவர்களையும் சந்தித்துப் பேசிய என்.எஸ்.ஏ அஜித் தோவல், இந்தியா-எத்தியோப்பியா இடையிலான மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.