ஈரான் போர் நிறுத்தம்: “நாகரிகமே அழிந்துவிடும்” என எச்சரித்த டிரம்ப் திடீர் பின்வாங்கல்! பாகிஸ்தான் மத்தியஸ்தம் பலன் அளித்ததா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது நடத்தவிருந்த மிகக்கடுமையான தாக்குதல் முடிவை கடைசி நேரத்தில் கைவிட்டு, போர் நிறுத்தத்திற்கு (Ceasefire) பச்சைக்கொடி காட்டியுள்ளார். ஏப்ரல் 7 இரவு 8 மணிக்குள் ஈரான் சரணடைய வேண்டும், இல்லையெனில் “ஒரு நாகரிகமே அழிந்துவிடும்” என்று எச்சரித்திருந்த டிரம்ப், காலக்கெடு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த அதிரடி முடிவை அறிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஜெனரல் அசிம் முனீர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஈரானில் தற்போது “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், இனி அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். அமெரிக்கா முன்வைத்துள்ள 15 அம்ச திட்டத்தில் பலவற்றை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இனி அந்த நாடு யுரேனியம் செறிவூட்டும் பணியில் ஈடுபடாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாகப் பாகிஸ்தான் தரப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும்… அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அவர்கள் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா அதனை வலிந்து கைப்பற்றும் என்று அவர் கூறினார். “மிட்நைட் ஹேமர்” (Midnight Hammer) போன்ற அதிரடித் தாக்குதல்கள் மூலம் யுரேனியக் கிடங்குகளை அழிக்கத் தயங்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "உலகை அச்சுறுத்த டிரம்ப்புக்கு எந்த உரிமையும் இல்லை!" - பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆவேசப் பேச்சு!

இந்த இக்கட்டான சூழலில் ஈரானின் நிலைப்பாடு குறித்துப் பார்க்கையில்… அமெரிக்கா தனது 10 அம்ச கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாகத் தங்களின் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் மற்றும் அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாக நீக்க வேண்டும் என்பதே ஈரானின் முக்கிய நிபந்தனையாக உள்ளது. டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் போன்ற அண்டை நாடுகளின் தலையீட்டால் போர் மேகங்கள் தற்காலிகமாகக் கலைந்துள்ளன.

வரவிருக்கும் நாட்களில் ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிடுமா அல்லது அமெரிக்காவின் அழுத்தம் நீடிக்குமா என்பதைப் பொறுத்தே மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி திரும்புவது அமையும். தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன. இருப்பினும், யுரேனியத்தைக் கைப்பற்றுவோம் என்ற அமெரிக்காவின் பிடிவாதம் அடுத்தகட்டப் பதற்றத்திற்கு வழிவகுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment