ஈரான் போர் பாதிப்பு: ஒரு கிலோ அரிசி விலை இத்தனை லட்சமா? அதலபாதாளத்தில் பொருளாதாரம் – பகீர் பின்னணி!

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல், தற்போது ஈரானின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் நிலவும் அதீத பணவீக்கம் (Hyperinflation) காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சாமானிய மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஈரானிய நாணயமான ‘ரியால்’ (Rial) மதிப்பு சர்வதேச சந்தையில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் தகவல்களின் படி, ஈரானில் ஒரு கிலோ அரிசியின் விலை 15,00,000 முதல் 20,00,000 ரியால் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 340 ரூபாய் முதல் 455 ரூபாய் வரை ஆகும். கடந்த 2024-25 ஆண்டுகளில் இதே ஒரு கிலோ அரிசி வெறும் 70 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்து… வெளியாகியுள்ள மேலதிக தகவல்கள் மேலும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஒரு கிலோ பருப்பின் விலை தற்போது 25 லட்சம் முதல் 35 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.550 முதல் ரூ.770) வரை உயர்ந்துள்ளது. போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் வேலைவாய்ப்புகள் குறைந்து, மக்களின் வாங்கும் திறன் (Purchasing Power) முற்றிலுமாகச் சரிந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஈரானிய மக்களைப் பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தீவிரம் எந்தளவு உள்ளது என்றால்… மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளான உப்பு, காய்கறி போன்றவற்றை வாங்குவதற்கே பல லட்சம் ரியால்களைச் செலவிட வேண்டியுள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டதால், ஒரு மூட்டை அரிசி வாங்க ஒரு பை நிறையப் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் இந்தச் சூழல் ஈரானிய இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் வர்த்தகத் தடைகள் மற்றும் போர்ச் செலவுகள் அந்நாட்டின் கஜானாவை காலி செய்துள்ள நிலையில், வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment