“அரிசி விலை விண்ணை முட்டுவது ஏன்?” – தமிழ்நாட்டில் திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அரிசி விலை உயர்வுக்கான உண்மையான காரணங்கள் மற்றும் சந்தை நிலவரங்கள் குறித்துத் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் விரிவான விளக்கமளித்துள்ளது.

தேவை மற்றும் உற்பத்தி இடையேயான இடைவெளி:

தமிழ்நாட்டின் மொத்த ஆண்டு அரிசி தேவை சுமார் 91 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. ஆனால், மாநிலத்தில் ஆண்டுக்கு 72 முதல் 75 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு பிற மாநிலங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. குறிப்பாக, தமிழக மக்கள் அன்றாடச் சமையலுக்கு அதிகம் விரும்பி வாங்குவது ‘மிக சன்ன ரக’ (Super Fine Variety) அரிசியைத்தான். இந்த வகை அரிசி பிரதானமாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

விலை உயர்வுக்கான முதன்மை காரணங்கள்:

தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மிக சன்ன ரக அரிசியின் விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளது. வரத்து குறைந்ததன் காரணமாகவே சந்தையில் அதன் விலை இயல்பாகவே உயர்ந்துள்ளது. இதுமட்டுமன்றி, நெல்லுக்கான ஆதார விலை உயர்வு, உரங்கள் மற்றும் எரிபொருள் (டீசல்) விலை அதிகரிப்பு ஆகியவை அரிசி உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவை உயர்த்தியுள்ளன. இதன் நேரடியாக தாக்கம் அரிசி சில்லறை விலையில் எதிரொலிக்கிறது. இருப்பினும், இந்த விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்று ஆலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "யோசிக்காமல் எடுத்த முடிவு!" – கரூர் வழக்கில் முதல்வர் விஜய்யை கடுமையாக விளாசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

ஜி.எஸ்.டி வரியும் ஏழை எளிய மக்களின் சுமையும்:

தற்போதுள்ள வரி நடைமுறைகளின்படி, 25 கிலோ அல்லது அதற்கு குறைவான எடையுள்ள அரிசி மூட்டைகளுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி (GST) வரி வசூலிக்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப 5 கிலோ முதல் 25 கிலோ வரையிலான சிறிய அரிசி மூட்டைகளையே அதிகம் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்த வரிச்சுமை நேரடியாக எளிய மக்களையே போய் சேர்கிறது. 25 கிலோவுக்கு மேற்பட்ட மொத்த மூட்டைகளுக்கு வரி இல்லாத நிலையில், எளிய மக்கள் வாங்கும் சிறிய மூட்டைகளுக்கு வரி விதிப்பது நீதியல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை முற்றிலும் நீக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.