தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூகுள் பே, போன்பே மற்றும் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக முழுமையாக நிறுத்துவதற்குத் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆன்லைன் வழியிலான ‘மணி மியூல்’ சைபர் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகள் பயன்படுத்திய பணப்பரிமாற்றச் சங்கிலியைக் கண்டறியும் போர்வையில், சம்பந்தமே இல்லாத பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் நடப்புக் கணக்குகளைச் சைபர் கிரைம் காவல்துறையினரும் வங்கிகளும் தொடர்ந்து முடக்கி வருவது இந்த அதிரடி முடிவிற்குக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சமீபத்தில் மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை நடத்திய தீவிர வேட்டையில், ஆன்லைன் நிதி மோசடிகளுக்குத் தங்களது வங்கிக் கணக்குகளை வாடகைக்குக் கொடுத்துக் கமிஷன் பெற்ற ‘மணி மியூல்’ கணக்கு உரிமையாளர்கள் 830-க்கும் மேற்பட்டோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் தொகையைக் கைமாற்றிவிடப் பல கட்ட கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு மாற்றப்படும் பணம், எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களால் பெட்ரோல் பங்க் கணக்குகளுக்கு யுபிஐ மூலம் செலுத்தப்படும் போது, அந்தத் தொகையைக் லீட் செய்து ஒட்டுமொத்தக் கணக்கையும் வங்கிகள் முடக்கி விடுகின்றன.
தங்களது பங்குகளில் தினசரி 200 முதல் 500-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும், எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளரின் பணத்தின் பின்னணியையோ அல்லது ஆதாரத்தையோ சரிபார்க்கத் தங்களுக்கு எந்தவித அமைப்பும் இல்லை என்றும் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தவறான பணப்பரிமாற்றம் என்ற பெயரில் பெட்ரோல் பங்கின் முதன்மை நடப்புக் கணக்குகளை முடக்குவதால், எண்ணெய் நிறுவனங்களுக்குப் பணம் செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமலும் வணிகர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வணிகச் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இது தொடர்பாகப் பல பங்க் உரிமையாளர்களை அதிகாலை வேளையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தும் போக்கும் அதிகரித்துள்ளதாகத் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சருக்குச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய குறிப்பிட்ட பரிவர்த்தனைத் தொகையை மட்டும் தற்காலிகமாகப் பிடித்து வைக்கலாமே தவிர, வணிகத்தின் மொத்தக் கணக்கையும் முடக்குவதும், வணிகர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க அரசே வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அதன் மூலமே வணிகர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதால், இந்த நியாயமற்ற நடவடிக்கைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் மாநிலம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் யுபிஐ மற்றும் கூகுள் பே சேவைகளை முழுமையாக நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என வணிகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.





