40 ஆண்டு சாம்ராஜ்யத்தை 30 நாளில் அழித்தோம்! டெண்டர் மாஃபியாவை ஓடவிட்ட ‘ஜீரோ கரப்ஷன்’ மாடல்!: சிவகாசியில் மாஸ் காட்டிய அமைச்சர் கீர்த்தனா! நடிகர் ஜெய்யை மேடையில் வைத்து எதிர்க்கட்சிகளின் கமிஷன் அரசியலை கிழித்தெறிந்த தவெக காரசார பேச்சு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற ‘உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்’ கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கீர்த்தனா பங்கேற்றுப் பேசினார். இந்த மேடையில் தவெக-வின் நட்சத்திரப் பேச்சாளரும் பிரபல நடிகருமான ஜெய் முன்னிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா மிகக் கடுமையான டேட்டா ஆதாரங்களுடன் அதிரடி பதிலடி கொடுத்து உரையாற்றினார்.

வாக்கு செலுத்திய சிவகாசி மக்களுக்கு நன்றி: வரலாறு காணாத பெருமழைக்கு மத்தியிலும் திரண்டிருந்த மக்களிடையே பேசிய அமைச்சர், “சிவகாசியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் நான் ஜெயிப்பேன் என்று கணக்கு போட்டவர்களின் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த சிவகாசி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னைச் சட்டமன்ற உறுப்பினராக்கி, இன்று அமைச்சரவையிலும் அமர வைத்து அழகு பார்த்த அத்தனை தவெக தொண்டர்களுக்கும் என் தலைவணங்கிய வணக்கங்கள்” என்று நெகிழ்ச்சியோடு பேசினார்.

அண்ணனுக்காகப் பட வாய்ப்புகளைத் தியாகம் செய்த ஜெய்: மேடையில் இருந்த நடிகர் ஜெய்யை வரவேற்றுப் பேசிய அவர், “திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, அடுத்த வீட்டுப் பையன் போல எளிமையாக வலம் வரும் தம்பி ஜெய், அண்ணன் முதலமைச்சர் விஜய் அவர்களுக்காகத் தனது கோடிக்கணக்கான சம்பளத்தையும், பட வாய்ப்புகளையும் அடியோடு தியாகம் செய்துவிட்டுத் தேர்தல் களத்தில் இறங்கி ஒவ்வொரு ஊராகப் பிரச்சாரம் செய்தார். அண்ணனுக்காக நான் என்றும் உறுதியாக நிற்பேன் என்று காட்டிய அவரின் உழைப்புக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

40 ஆண்டு கால மாஃபியாவை ஒழித்த 30 நாள் ஆட்சி: எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் கீர்த்தனா, “40, 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள், வெறும் 30 நாட்களே ஆகியுள்ள நமது அரசைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்கள். கடந்த ஆட்சியில் அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் ரூ.100 முதல் ரூ.1000 வரை லஞ்சம் கொடுத்தால்தான் கோப்புகள் நகரும் என்ற நிலை இருந்தது. 23% கமிஷன், 24% கமிஷன் எனத் தனித்தனியாகப் பிரித்து டெண்டர் மாஃபியாக்கள் சுருட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், இன்று நமது தவெக ஆட்சியில் ‘ஜீரோ கரப்ஷன்’ (Zero Corruption) மாடலைக் கொண்டு வந்து, அந்த 50 ஆண்டு கால ஊழல் சாம்ராஜ்யத்தை ஒரே மாதத்தில் அடியோடு அழித்துக் காட்டியுள்ளோம்.

நான் வெளியிட்ட முதலீட்டு வீடியோவை ரீல்ஸ் (Reels) என்று கிண்டல் செய்தார்கள். மக்களின் வரிப் பணத்தில் குடும்பம் குடும்பமாக வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் சென்று முதலீடுகளைத் தேடியவர்களுக்கு மத்தியில், நாம் வெளியிட்ட சிறிய வீடியோக்களைப் பார்த்துவிட்டு வெளிநாட்டு சிஇஓ-க்களிடம் நமது தவெக அரசின் தொழில் கொள்கையைப் பெருமையாகப் பேசி, தங்களின் சொந்த டிக்கெட் செலவில் தாயகம் வந்து அண்ணன் விஜய்க்கு வாக்கு செலுத்தியுள்ளனர் நமது வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்கள்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

முந்தைய ஆட்சியின் 3 லட்சம் கோடி ஊழல் பட்டியல்: கடந்த காலத் தொழில் துறையின் அவல நிலை குறித்துப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “டேட்டாவோடு பேசுபவர்கள் இதைக் கவனியுங்கள். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டை விட்டு 25 முக்கியப் பெரு நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு ஓடிப் போயின. அதற்குக் காரணம், அப்போதைய தொழில் துறை அமைச்சரின் தம்பியாக வலம் வந்த ஒரு ‘ஆக்டிங் அமைச்சர்’ தான். ஒவ்வொரு டெண்டருக்கும், ஒவ்வொரு கார்ப்பரேட் முதலீட்டிற்கும் அவர் கேட்ட கமிஷன் மற்றும் லஞ்சக் கொடுமையால், ‘எப்பா… தமிழ்நாடே வேண்டாம்!’ என்று அலறி அடித்துக்கொண்டு நிறுவனங்கள் வெளியேறின. இதனால் 2 லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது; 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வராமல் முடங்கின. 30 நாள் ஆட்சியை விமரிசிக்கும் தம்பியே… இன்னும் ‘ஆக்டிங்’ உலகிலேயே வாழ்ந்து கொண்டு ஊழல் செய்ய நினைக்காதே, அதையும் முழுமையாக ஒழித்துக் கட்டும் சட்ட விதிகளை தவெக அரசு வகுத்து வருகிறது” என்று மேடையில் அதிரடியாக எச்சரித்துப் பேசினார்.