தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் (TASMAC) விற்பனை நிலையங்களில் தனியார் நிறுவனம் தயாரித்து வழங்கி வந்த 11 பிரபல மதுபான பிராண்டுகளின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக தடை விதித்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய FSSAI அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், குறிப்பிட்ட இந்த 11 பிராண்ட் மதுபானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மாறுபட்ட செயற்கை சுவையூட்டிகள் (Artificial Flavors) பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த பிராண்டுகளின் மாற்றப் பணி (Transfer) மற்றும் விற்பனையை (Sales) உடனடியாக நிறுத்துமாறு டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இந்த 11 பிராண்ட் மது வகைகளை டாஸ்மாக் கடைகளிலோ அல்லது கிடங்குகளிலோ விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட பிராண்டுகளின் பட்டியலில் VSOP எக்ஸா கோல்டு பிராந்தி, லூயிஸ் வெர்னண்ட் எக்ஸ்.ஓ., எம்.சி. VSOP பிராந்தி, No.1 MC McDowell’s, மென்ஸ்கிளப், ஹனிபீ, என்ரிக்கா வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ., என்ரிக்கா பிரீமியம் பிரெஞ்சு பிராந்தி, வீரன் மற்றும் ஓல்டு இண்டி ஆகிய 11 முக்கிய மதுபான வகைகள் இடம்பெற்றுள்ளன.





