நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் இந்திய ரயில்வேயின் உண்மையான பின்னணி நிலவரம் குறித்து இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 16 மண்டலங்களில் உள்ள 512 பிரதான ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த தீவிர ஆய்வில், சுமார் 89 சதவீதத்திற்கும் அதிகமான அதாவது 458 ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான மிக அடிப்படை வசதிகள் கூட முழுமையாக இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. அனைத்து தணிக்கை அளவுகோல்களையும் பூர்த்தி செய்து அனைத்து வசதிகளையும் சரியாகப் பராமரித்து வரும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை வெறும் 54 மட்டுமே ஆகும்.
இந்த அறிக்கையின் மிக ஆபத்தான அம்சம் என்னவென்றால், ரயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்த வெளிப்பாடாகும். சென்னை சென்ட்ரல், செகந்திராபாத், ஹைதராபாத், கோயம்பத்தூர், பாலக்காடு, மும்பை சிஎஸ்எம்டி உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்களின் வாட்டர் கூலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் ‘ஈ.கோலை’ (E. Coli) மற்றும் டோட்டல் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா தொற்று மனிதர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு, உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) மற்றும் தீவிரமான நிகழ்வுகளில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
ரயில்வே வாரியம் கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே அனைத்து நிலையங்களிலும் அடிப்படை வசதிகளை முழுமையாக மேம்படுத்த இலக்கு நிர்ணயித்த போதிலும், ஏழாண்டுகள் கடந்தும் அந்த இலக்கு எட்டப்படவில்லை. தினமும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித் தரும் நியூ டெல்லி, ஹவுரா, அகமதாபாத் போன்ற மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கூட போதுமான அளவு குடிநீர் குழாய்கள், மின்விசிறிகள், இருக்கைகள் மற்றும் சுத்தமான கழிப்பறைகள் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட 512 நிலையங்களில் 138 நிலையங்களில் குடிநீர் குழாய் பற்றாக்குறையும், 111 இடங்களில் சிறுநீர் கழிப்பறைகளும், 59 இடங்களில் பொதுக் கழிப்பறைகளும் போதிய அளவில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
வெயில் மற்றும் மழையிலிருந்து பயணிகளைப் பாதுகாக்கும் பிளாட்ஃபார்ம் கூரைகள் 65 நிலையங்களில் சரியான தரத்தில் இல்லை. மேலும் 379 ரயில் நிலையங்களில் பொதுப் பெட்டிகள் நிற்கும் இடங்களில் எந்தவித நிழற்கூரைகளும் இல்லாததால் சாதாரண பயணிகள் திறந்தவெளியில் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான வசதிகளும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. 227 நிலையங்களில் சக்கர நாற்காலி செல்பவர்களுக்கான சரிவுப் பாதைகள் (Ramps) இல்லை. 297 நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான குடிநீர் வசதியோ, 134 நிலையங்களில் அவர்களுக்கான பிரத்யேகக் கழிப்பறைகளோ இல்லை என்பது வேதனையளிக்கும் நிலையாகும்.
அவசர மருத்துவ உதவிகளைப் பொறுத்தவரை, 441 நிலையங்களில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) பரிந்துரைத்த அவசர மருத்துவ அறைகளோ அல்லது முதலுதவிப் பெட்டிகளோ கூட தயாராக இல்லை. சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்காக ரயில்வே துறை ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய போதிலும், 301 நிலையங்களில் தெருநாய்களின் தொல்லையும், 165 நிலையங்களில் மிகவும் மோசமான கழிப்பறைகளும், 243 நிலையங்களில் எச்சில் மற்றும் பாக்குக் கறைகளும் படிந்து கிடக்கின்றன.
இவை அனைத்தையும் விட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், நிதிப் பற்றாக்குறை எதுவும் இல்லாத சூழலிலும் இந்த அவலநிலை நீடிக்கிறது என்பதாகும். கடந்த 2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பயணிகள் வசதிக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் நிதியில் 36 முதல் 44 சதவீதம் வரை செலவழிக்கப்படாமல் முடங்கிக் கிடந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 5,956 கோடி ரூபாயாகும். பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அதே வேளையில், 59 சதவீத பயணிகள் வசதித் திட்டப் பணிகள் 3 முதல் 4 ஆண்டுகள் வரை காலதாமதமாகவே நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், அனைத்து ரயில் நிலையங்களிலும் உடனடியாகச் பாதுகாப்பான குடிநீரை உறுதிசெய்யவும், தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் ரயில்வே வாரிய மட்டத்தில் இந்தப் பணிகள் நேரடியாகக் கண்காணிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.





