Cyber Fraud Alert: வாட்ஸ்அப்பில் வந்த போலி திருமண அழைப்பிதழ்! ரூ.10 லட்சத்தை இழந்த வனத்துறை அதிகாரி!

பெங்களூருவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர், வாட்ஸ்அப்பில் வந்த போலி திருமண அழைப்பிதழ் செயலி (APK File) மூலமாக ரூ.10 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வந்த அழைப்பிதழ் கோப்பு என நம்பி தவறான ‘APK’ செயலியைத் தரவிறக்கம் செய்த சில நிமிடங்களிலேயே, அவரது வங்கிக் கணக்கிலிருந்து இந்த பெரும் தொகை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுத் திருடப்பட்டுள்ளது.

பெங்களூரு யஷ்வந்த்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் கர்நாடக மாநில வனத்துறையில் துணை வரம்பு வன அதிகாரியாக (DRFO) பணியாற்றி வருகிறார். இவருக்குக் கடந்த ஜூலை 13-ஆம் தேதி மாலை தனது நெருங்கிய நண்பரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து நிச்சயதார்த்த அழைப்பிதழ் வடிவில் ஒரு செய்தி வந்துள்ளது. நண்பரிடமிருந்து வந்த செய்தி என்பதால் எந்தவித சந்தேகமும் இன்றி, அதில் இணைக்கப்பட்டிருந்த ‘APK’ வடிவிலான கோப்பைக் கிளிக் செய்து தனது கைபேசியில் அவர் நிறுவியுள்ளார்.

அந்தச் செயலியைப் பதிவிறக்கிய அடுத்த 30 நிமிடங்களுக்குள், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.9,96,659 தொகை ஏழு வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் மர்ம நபர்களால் அபேஸ் செய்யப்பட்டதாகத் தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரி உடனடியாகத் தனது நண்பரைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அவரது வாட்ஸ்அப் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அவரது தொடர்பில் உள்ள 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இதுபோன்ற போலி ஏபிகே கோப்புகள் அனுப்பப்பட்டிருப்பது அம்பலமானது.

பணத்தை இழந்த அதிகாரி உடனடியாக தேசிய சைபர் உதவி எண் 1930-ஐத் தொடர்புகொண்டு புகாரளித்ததுடன், பெங்களூரு வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையிலும் அதிகாரப்பூர்வ புகார் மனுவை அளித்துள்ளார். வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ் மற்றும் சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து ‘APK’ வடிவில் வரும் கோப்புகளை ஒருபோதும் தரவிறக்கம் செய்யக் கூடாது என்றும், அத்தகைய கோப்புகளைத் திறப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபரைத் தொலைபேசியில் அழைத்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.