காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய ஜோசப் விஜய் முன்முயற்சி எடுத்து வரும் நிலையில், இந்த ராஜதந்திர நடவடிக்கை வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர், “கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் கர்நாடக முதல்வர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இருப்பினும் நீதிமன்ற தீர்ப்புகளையும், நடுவர்மன்ற உத்தரவுகளையும் கர்நாடக அரசு சரியாக அமல்படுத்தாத சூழலே நீடித்து வருகிறது.
ஆனால், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் கர்நாடக தலைவர்களிடம் நெருங்கிய அணுகுமுறையைக் கொண்டு காவிரி நீரைக் காவிரி டெல்டா பகுதிக்குப் பெற்றுத் தந்தார். அதே போன்ற ஒரு நற்புறவும், காங்கிரஸ் மற்றும் தவெக இடையிலான நல்லெண்ண சூழலும் தற்போது நிலவுவதால், முதலமைச்சர் விஜய் எடுக்கும் இந்த முயற்சி சாதகமான முடிவைத் தரும் என்று நம்பலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும், மேகதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் 16 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசும் கர்நாடக அரசும் அரசியல் கடந்து தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





