“உலகமே நடுங்குச்சு.. ஆனா இந்தியா!” – பிரதமர் மோடி பேசிய சிலிர்க்க வைக்கும் மாஸ் ஸ்பீச்!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஒருங்கிணைந்த பசுமைக்காடு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்தைப் பார்வையிட்ட பிறகு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய பிரதமர், சர்வதேச அரங்கில் இந்தியாவின் அசாத்திய பலத்தையும், “புதிய இந்தியாவின்” அசைக்க முடியாத உத்வேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் சிலிர்க்க வைக்கும் உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை இந்தியா தனது தீர்க்கமான முடிவுகளால் எப்படி முறியடித்தது என்பதை அவர் உலகிற்குப் பிரகடனம் செய்துள்ளார்.

மேற்காசியப் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் சர்வதேச கடல் வணிகப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ முடக்கப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. பல வல்லரசு நாடுகளே தங்களின் குடிமக்களுக்குப் பெட்ரோல், டீசலைத் தலா இவ்வளவுதான் என்று ரேஷன் முறையில் அளவோடு பங்கீடு செய்தன. மேலும் பல நாடுகளில் எரிபொருட்களின் விலை 40% முதல் 50% வரை எகிறியது. “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலரிலிருந்து 120 டாலராக உயர்ந்தது” என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அந்த இக்கட்டான சூழலிலும் இந்தியாவில் ஒரு நாள் கூட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “குடும்பத்தை பத்தி கேவலமா பேச யாரு அதிகாரம் கொடுத்தா?” - முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் கைது பின்னணி! உடைத்த அமைச்சர் CTR!

இந்த விலை உயர்வு சுமை இந்தியப் பொதுமக்களையும், விவசாயிகளையும் தாக்காமல் இருக்க, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சுமார் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை அரசே ஏற்றுக்கொண்டு மக்களைப் பாதுகாத்தது என்று பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அதேபோல, நாட்டில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு வராமல் தடுக்க, வெறும் 7 நாட்களில் தொழில்துறைக்கான எரிவாயு பயன்பாட்டைச் சமையல் கேஸ் தயாரிப்பிற்கு மாற்றி, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியைத் தினசரி 35,000 மெட்ரிக் டன்னிலிருந்து 54,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தியதாகத் தெரிவித்தார்.

இந்த இமாலய வெற்றிக்கு இந்தியாவின் பலம் வாய்ந்த சர்வதேச ராஜதந்திர உறவுகளே முக்கியக் காரணம் என்று பிரதமர் மோடி மேடையில் முழங்கினார். இந்த நெருக்கடிக்கு முன்பு வரை இந்தியா வெறும் 25 நாடுகளிலிருந்து மட்டுமே எரிபொருட்களை இறக்குமதி செய்து வந்த நிலையில், போர் நடந்த காலகட்டத்தில்கூடத் தனது அசாத்திய வெளியுறவுக் கொள்கையினால் 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து எரிபொருட்களைத் தங்கு தடையின்றி இறக்குமதி செய்து இந்தியா சாதித்துக் காட்டியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் வதந்திகளைப் பரப்பி, அரசியல் ஆதாயம் தேட முயன்ற எதிர்க்கட்சிகள் இன்று இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு ஏமாற்றத்தின் விளிம்பில் மூழ்கியுள்ளனர் என்று சாடினார். “எந்தவொரு சூழலிலும் தேசத்தின் நலனும், நமது நாட்டு மக்களின் பாதுகாப்பும் தான் இந்த அரசுக்கு முதன்மையானது” என்ற பலத்த மெசேஜை உலகிற்குச் சொல்லித் தனது உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி.