தமிழக அரசியல் களம் தற்பொழுது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமாகப் புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே ஏற்கனவே நிழல் யுத்தம் நிலவி வரும் சூழலில், இந்த விவகாரம் நெட்டிசன்களுக்கு செம்ம தீனியாக அமைந்துள்ளது.
வழக்கமாகச் செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தனது டைமிங் கவுண்ட்டர்கள் மற்றும் நக்கல் பேச்சுகள் மூலம் லைம்லைட்டில் இருக்கும் ஜெயக்குமார், இந்த முறை முதலமைச்சர் விஜய்யை நேரடியாக வம்புக்கு இழுத்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தள பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு, பத்திரிகையாளர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று ஜெயக்குமார் அருகில் நின்று ‘பாடம் எடுப்பது’ போல வடிவமைக்கப்பட்டுள்ளது. “அண்ணன் ஜெயக்குமார் சும்மாவே வளவளன்னு பேசுவாரு, இப்ப AI டெக்னாலஜிய வச்சு முதலமைச்சரையே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாரே!” என்று இந்த பதிவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் கமெண்டுகளைப் குவித்து வருகின்றனர்.
பொதுவாகத் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் விஜய் பெரிய அளவில் முறையான பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதில்லை என்றும், செய்தியாளர்களின் நேரடிக் கேள்விகளைத் தவிர்க்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜெயக்குமார், இந்த AI புகைப்படம் மூலம் தவெக அரசைச் சற்றே காரசாரமாகக் கிண்டல் செய்துள்ளார்.
இந்த ட்வீட் வெளியான சில நிமிடங்களிலேயே சோசியல் மீடியாவில் தவெக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே பயங்கரமான கமெண்ட் வார் (Comment War) வெடித்துள்ளது. ஜெயக்குமாரின் இந்த நக்கல் பதிவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தவெக ஆதரவாளர்களும் பழைய அரசியல் சம்பவங்களை மீம்ஸ்களாகப் பதிவிட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.





