அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஹோமுஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் நீண்ட நாட்களாக நிலவி வரும் மோதல் போக்கு தற்பொழுது மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலாக மாறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்தபடியே, ஈரானின் முக்கியப் போக்குவரத்துப் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தீவிரத் தாக்குதல்களின் காரணமாகத் தனது நாட்டின் மின்சாரக் கட்டமைப்பு மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக ஈரான் அரசு தற்பொழுது முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஈரானின் அரசு நடத்தும் மின் விநியோக நிறுவனமான ‘தவானிர்’ (Tavanir) அமைப்பின் தலைமை நிர்வாகி முகமது அல்லாஹ்-தத் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களின் காரணமாகத் தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் சுமார் 4,200 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை ஈரான் முழுமையாக இழந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் விநியோகக் கோடுகள் மற்றும் துணை மின் நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்தத் திடீர் இழப்புகளால் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் துறையில் மட்டும் சுமார் 60 டிரில்லியன் டோமன் (ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ஈரானின் தெற்கு மாகாணங்களில் தற்பொழுது வரலாறு காணாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒருபுறம் கடுமையான கோடை வெப்பம், மறுபுறம் அமெரிக்கத் தாக்குதல்களால் சீர்குலைந்துள்ள மின் கட்டமைப்பு என இருமுனைத் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்துள்ளது. இதனால், மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வரும் ஈரானின் எரிசக்தி அமைச்சகம், பொதுமக்கள் அனைவரும் தங்களது மின்சாரப் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாகப் பகல் நேரங்களில் ஏர் கண்டிஷனர்கள் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே ஈரானில் முறையற்ற மின் விநியோகமும், அடிக்கடி ஏற்படும் மின் வெட்டும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் நேரடி வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மிகக் கடுமையான நிலைக்குத் தள்ளியுள்ளது. பல முக்கிய நகரங்களில் தொடர்ந்து பல மணி நேரங்கள் மின்தடை நீடித்து வருவதால், அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற பதற்றம் உலக அரங்கில் அதிகரித்துள்ளது.





