“என்னை கொன்றால் ஈரானை தரைமட்டமாக்குங்கள்!” அதிகாரிகளுக்கு டிரம்ப் போட்ட ரகசிய உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை ஈரானிய ஏஜெண்டுகள் அல்லது அந்த நாடு படுகொலை செய்ய முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றால், ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலை நடத்துமாறு அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார். நியூயார்க் போஸ்ட் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த அதிரடி தகவலை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். நான் நீண்ட காலமாக ஈரானின் இலக்குப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறேன், இதுதான் வாழ்க்கை, நாம் இதைத்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஈரான் மீது குண்டுகளை வீசி தரைமட்டமாக்குமாறு மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளேன் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் ஈரானின் ஆன்மீகத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனியின் உடல் மாஷ்ஹாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தின் போது பல்லாயிரக்கணக்கான ஈரானிய மக்கள் கலந்துகொண்டு டிரம்ப்பிற்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினர். டிரம்ப்பை நாங்கள் நிச்சயம் கொல்வோம் என்றும், அமெரிக்காவிற்கு வீழ்ச்சி என்றும் அவர்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனர். டிரம்ப் முகத்தில் இலக்கு வைக்கப்பட்டது போன்ற சுவரொட்டிகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் உளவுத்துறை டிரம்ப்பை கொல்ல ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்த டிரம்ப், இஸ்ரேல் எந்த உளவுத் தகவலையும் வழங்கவில்லை என்றும், தான் நீண்ட காலமாகவே ஈரானின் முதன்மை இலக்காக இருந்து வருவதாகவும் கூறினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஈரான் போட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட டொனால்ட் டிரம்ப் திடீர் மறுப்புத் தெரிவித்ததால் வெள்ளை மாளிகையில் கூடிய அவசரக் கூட்டம்

அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பு சட்ட வல்லுநர்கள் இதன் சட்டபூர்வத்தன்மை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அமெரிக்க சட்டப்படி, ஒரு அதிபர் மரணமடைந்த பிறகு அவரது ராணுவ உத்தரவுகள் செல்லுபடியாகாது. அதிபர் இறந்த அடுத்த கணமே அவரது ராணுவக் கட்டுப்பாட்டு அதிகாரம் அடுத்ததாகப் பொறுப்பேற்கும் புதிய அதிபரிடம் சென்றுவிடும் என்பதால், டிரம்ப் மரணத்திற்குப் பிறகு இந்த உத்தரவை அவராகச் செயல்படுத்த முடியாது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தூதரக ரீதியாக நடந்தாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த விவகாரத்தால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.