DMK Vs TVK Politcs: “அது எப்படி உங்க சாதனையாகும் சிஎம் சார்…” நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் வாசித்த பட்டியலை ஓப்பனாக கிழித்த உதயநிதி… மேகதாது விவகாரத்தில் சைலன்ட் ஆனது ஏன் என விளாசல்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்று ஆற்றிய உரை தற்பொழுது தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்புச் சாதனைகளைப் பட்டியலிட்டு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். இந்நிலையில், முதலமைச்சரின் இந்த உரைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், “தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்து விட்டது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் போலி கட்டமைப்புகளை உருவாக்கிய இன்றைய முதலமைச்சர், தற்பொழுது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாதனைகள் என்று ஒரு பெரும் பட்டியலையே வாசித்து இருக்கிறார்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-ஆவது பெரிய பொருளாதாரமாகத் திகழ்வது, இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பது, பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் அசுர வளர்ச்சி எனப் பாராட்டிப் பேசியுள்ளாரே, இவை அனைத்தும் விஜய்யின் ஒரு மாத கால ‘சோஃபா மாடல்’ ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது 5 ஆண்டுகாலத் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க தவெகவின் சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது என்று அவர் சாடியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  The Delimitation Puzzle: 543-ல் இருந்து 824 ஆக உயரும் எம்பி இடங்கள்... தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்குமா புதிய தொகுதி மறுவரையறை... டெல்லி மாஸ்டர் பிளான் பின்னணியில் இருக்கும் நிஜ அரசியல் என்ன!

மேலும், தமிழகத்தின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் காட்டியுள்ள மௌனத்தையும் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். “தேர்தலுக்கு முன்பு நீட் மட்டும்தான் உலகமா என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்” என்று குறிப்பிட்ட உதயநிதி, டெல்லி வரை சென்றவர் நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக் கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறக்காமல், ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று முற்றிலும் சைலண்டாகத் திரும்பி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றிப் பெற்றுள்ள இந்த போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது என்றும் அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.