தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தலைவரிடம் வாழ்த்துப் பெற்ற உதயநிதி
எதிர்க்கட்சித் தலைவராகத் தனது முதல் நாளைத் தொடங்குவதற்கு முன்பாக, உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றும் வாய்ப்பைத் தந்துள்ள கழகத்தலைவர் அவர்களை, பேரவைக்குச் செல்லும் முன்பு இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். நன்றி தெரிவித்தோம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
தலைமைக்கும் மக்களுக்கும் நன்றி
தனது புதிய பொறுப்பு குறித்து இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, “17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கிய கழகத்தலைவர் அவர்களுக்கும், கழக நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றி” எனத் தெரிவித்துள்ளார். மேலும், புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி
தனது செயல்பாடுகள் குறித்துப் பேசிய உதயநிதி, “எங்கள் தலைவர் சொன்னது போல, ஒரு எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். சட்டமன்றம், மக்கள் மன்றம் மற்றும் சமூக ஊடகங்கள் என அனைத்து தளங்களிலும் மக்களின் குரலாகத் திமுக ஒலிக்கும். அரசின் செயல்பாடுகளில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒரு முக்கிய ஊடகமாகத் தான் செயல்படப் போவதாகவும், மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு 100% உண்மையாக இருந்து கடுமையாக உழைப்பேன் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.





