“யார் வர்றாங்கன்னே தெரியாம ஆட்சி நடத்துறீங்களா?” தமிழகத்தில் தொடரும் வடமாநில குற்றங்களால் அண்ணாமலை ஆவேசம்! கும்மிடிப்பூண்டி கொடூரத்திற்குப் பின் கிளம்பிய மெகா டிமாண்ட்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை வடமாநில நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள சூழலில், மாநிலத்தில் அதிகரித்து வரும் வடமாநில நபர்களின் குற்றங்களைக் கட்டுப்படுத்த தவெக அரசுக்கு ‘வீ த லீடர்’ (We The Leader) அமைப்பின் தலைவர் அண்ணாமலை மிகக் கடுமையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விரிவான பதிவில், கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொடூரக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்துள்ள நிலையில், இதே ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடமாநில இளைஞர்கள் தொடர்புடைய தொடர் குற்றங்கள் அரங்கேறி வருவதை அவர் பட்டியலிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற வழக்கு, தாம்பரம் அருகே இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை, வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கு மற்றும் மதுரவாயலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என அடுத்தடுத்து வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது சட்டம் ஒழுங்கு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். “குற்றவாளிகளைப் பிடிப்பது பாராட்டுக்குரியது என்றாலும், குற்றங்கள் நடக்காமல் தடுக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்!” எ.வ.வேலு ரெய்டுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! நீதிமன்றத்தில் நிரூபிப்பார்!: அடக்குமுறைகளை பார்த்த இயக்கம் திமுக! சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம்! திமுக தலைவர் அதிரடி அறிக்கை!

பணி நிமித்தமாகப் பிற மாநிலத்தவர்கள் தமிழகம் வருவது இயல்பானது என்றாலும், தமிழகத்திற்குள் வருபவர்கள் குறித்த முறையான விவரங்கள் அவர்களைப் பணியமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்கள் தங்கியுள்ள நகரங்கள், சொந்த ஊர் முகவரி, தற்போதைய பணியிடம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நிறுவன உரிமையாளர்கள் அரசிடம் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும், அதனைத் தமிழக அரசு ஒரு பிரத்யேகப் பதிவேடு மூலம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.