பெங்களூரு என்றாலே டிராபிக் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக வினோதமான செய்திகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில், சேஷாத்ரிபுரம் பகுதியில் நான்கு பூனை குட்டிகளுக்காக அண்டை வீட்டாருக்கு இடையே நடைபெற்ற “வாரிசு உரிமை” சண்டை இப்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. “உன் வீட்டு ஆண் பூனை தான் என் பெண் பூனைக்கு வில்லன்; அதனால் இந்த நான்கு குட்டிகளையும் நீயே தத்து எடுத்து வளர்க்க வேண்டும்” என ஒரு பெண்மணி கிளம்பியதுதான் இந்த ரகளையின் ஆரம்பம்.
பெங்களூருவின் சாதாரண தெருச்சண்டை போலத் தொடங்கிய இது, ஒரு கட்டத்தில் “பூனை குட்டிக்கு செட்டில்மென்ட்” கேட்கும் நிலைக்குச் சென்றது. “என் பூனைக்கு உன் பூனை தான் அப்பா” என அந்தப் பெண்மணி பிடிவாதம் பிடிக்க, அண்டை வீட்டாரோ “அதெல்லாம் கிடையாது” என மறுக்க, வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் “நீயே வச்சுக்கோ” என ஒரு குட்டியை அண்டை வீட்டார் காம்பவுண்டிற்குள் வீசும் அளவிற்கு விவகாரம் சீரியல் ரேஞ்சுக்குச் சென்றது.
View this post on Instagram
பஞ்சாயத்தை முடிக்க வந்த போலீஸ்: சத்தம் கேட்டுப் பதறிப்போன மக்கள் ‘ஹொய்சாலா’ போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீஸாரோ, “நாங்க எத்தனையோ வாரிசு சண்டையைப் பார்த்திருக்கோம், ஆனா இந்த ‘கேட்-பட்டர்னிட்டி’ (Cat-paternity) கேஸை இப்பதான் பார்க்கிறோம்” எனத் திகைத்துப் போயினர். சமூக வலைதளங்களில் “இதுக்கு ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்தா என்ன?” என நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டனர்.
வெளியான அதிரடித் தீர்ப்பு: இந்த விவகாரத்தில் நான்கு குட்டிகளைத் தலா இரண்டு வீடுகளுக்குப் பிரித்துக் கொடுத்ததாகப் புரளிகள் பரவின. ஆனால், போலீஸார் செய்த தரமான சம்பவம் வேறொன்று. அண்டை வீட்டாருக்குள் மீண்டும் “பூனை யுத்தம்” வராமல் இருக்க, அந்த நான்கு குட்டிகளையும் அங்கிருந்து அள்ளிச் சென்று ஒரு பாதுகாப்பான விலங்கு நல ஆர்வலரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் “குட்டியும் இல்லை, சண்டையும் இல்லை” எனப் பஞ்சாயத்தை முடித்து வைத்தனர். செல்லப் பிராணிகளை ஸ்டெரிலைசேஷன் (Sterilization) செய்யாமல் விட்டால், ஊர் வாய்க்கு மட்டும் அல்ல, போலீஸ் ஸ்டேஷனுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்!