“அவர் என் டிரைவர் இல்ல, உடன் வேலை பார்க்குற சக ஊழியர்!” – டிரைவரின் ரூ.4.25 லட்ச பைபாஸ் சர்ஜரி செலவை ஏற்ற முதலாளி!

தன்னிடம் 15 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, அவசர பைபாஸ் (Bypass) அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலில், அவரது ரூ.4.25 லட்சம் மருத்துவக் கட்டணத்தை முழுமையாக ஏன்றதோடு, அவரை “வேலைக்காரர்” என்று அழைக்காமல் “சக ஊழியர்” எனக் குறிப்பிட்ட முதலாளியின் மனிதநேயச் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

மும்பையில் உள்ள பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரசாந்த் மிஸ்ரா என்பவர், தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும், அதற்கான செலவு தங்களின் துங்கா மருத்துவமனையில் (Thunga Hospital) சுமார் ரூ.4.25 லட்சம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் அந்த நோயாளி ஒரு ஓட்டுநராகப் பணிபுரிவதால், பிருஹன்மும்பை மாநகராட்சி (BMC) நடத்தும் அரசு மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், அன்று மாலையே அந்த ஓட்டுநரின் மகன் மருத்துவரைத் தொடர்புகொண்டு, “டாக்டர், எங்கள் முதலாளி இந்தத் துங்கா மருத்துவமனையிலேயே சிகிச்சையை முடிக்க விரும்புகிறார். செலவில் உங்களால் முடிந்தளவு குறைத்துக் கொடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவரும் அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், மறுநாளே அந்த ஓட்டுநரின் முதலாளி அறுவை சிகிச்சைக்கான முழுத் தொகையான ரூ.4.25 லட்சத்தையும் வங்கிக் கணக்கு மூலம் (RTGS) நேரடியாகப் செலுத்தி, அறுவை சிகிச்சை உடனடியாக நடைபெற வழிவகுத்தார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததும், நோயாளிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் பிரசாந்த் மிஸ்ரா, அந்த முதலாளியைத் தொலைபேசியில் அழைத்து, “உங்கள் உதவியால் சுக்லா என்பவரின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, நன்றி” எனக் கூறியுள்ளார். அதற்கு அந்த முதலாளி, “என் சக ஊழியரைக் கவனமாகப் பார்த்துக் கொண்டதற்கு உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார். ‘சக ஊழியர்’ (Colleague) என்ற வார்த்தையைக் கேட்டு வியப்படைந்த மருத்துவர், “அவர் உங்களிடம் ஓட்டுநராகப் பணிபுரிவதாகக் கூறினாரே?” எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த முதலாளி அளித்த பதில் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது: “டாக்டர், நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறோம். அவர் கடந்த 15 ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார். அவரை நான் வெறும் டிரைவராக மட்டும் பார்க்கவில்லை. நான் ஒரு வேலை செய்கிறேன், அவர் ஒரு வேலை செய்கிறார். தினசரி வாழ்க்கையில் எங்கள் பொறுப்புகள் மாறுபடலாம், ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து உழைக்கும் சக ஊழியர்கள் தான்!” என்று கூறியுள்ளார்.

இந்த பதிலைக் கேட்டு தான் வார்த்தைகளின்றி உறைந்துபோனதாகக் கூறியுள்ள மருத்துவர் பிரசாந்த் மிஸ்ரா, “நம் வீட்டில் அல்லது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வெறும் ‘வேலைக்காரர்கள்’ என ஒருபோதும் தாழ்வாகப் பார்க்கக் கூடாது. நம் வாழ்க்கை சுமுகமாக இயங்குவதற்கு அவர்களே முக்கியக் காரணம். அவர்கள் அனைவரும் சமமான மரியாதையையும் கண்ணியத்தையும் பெறத் தகுதியானவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். உழைப்புக்கு மரியாதை அளித்த அந்த முதலாளியின் நற்குணத்தைப் பாராட்டி ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் இணையத்தில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.