பெங்களூரு போன்ற பெருநகரங்களில் அதிக சம்பளத்தில் கார்ப்பரேட் வேலை கிடைப்பதே பலரின் வாழ்நாள் கனவாக உள்ளது. ஆனால், ஆண்டிற்கு 11 லட்ச ரூபாய் சம்பளம் தந்த 9-to-5 கார்ப்பரேட் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி சுயதொழில் தொடங்கி அசத்தியுள்ளார் ஒரு இளைஞர். ஆடம்பரமான கார்ப்பரேட் கௌரவத்தை விட மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய தொழிலே சிறந்தது என நிரூபித்துள்ள அவரது கதை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அன்கித் பாண்டே என்ற எக்ஸ் (ட்விட்டர்) பயனர் தனது நண்பரின் இந்த வெற்றிக் கதையைப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பெங்களூரு வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த இளைஞர், தனது சொந்த நிலத்திலேயே சிறிய அளவிலான குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை அமைத்துள்ளார். பின்னர், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைகளுக்குத் தினமும் குடிநீர் கேன்களை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளார். தற்போது சுமார் 300 வீடுகள் மற்றும் கடைகளுக்குத் தினமும் 300 குடிநீர் கேன்களை அவர் வழங்கி வருகிறார்.
My friend quit his ₹11 LPA 9-to-5 job in Bengaluru.
Now he earns nearly ₹28 lakh a year from his home.
Instead of chasing promotions, he went back home and started a simple water purification business.
He installed a water purification plant on his own property and connected… pic.twitter.com/uY3mfTd0d3
— Ankit Pandey (@iamankitpande) August 3, 2026
ஒரு நீர் கேனின் விலை 30 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், தினமும் 9,000 ரூபாயும், மாதத்திற்கு சுமார் 2.7 லட்ச ரூபாயும் அவருக்கு வருமானமாகக் கிடைக்கிறது. சுத்திகரிப்பு மற்றும் மின்சாரக் கட்டணமாக மாதம் 15,000 ரூபாயும், போக்குவரத்துச் செலவாக 20,000 ரூபாயும் செலவாகிறது. சொந்த நிலம் என்பதால் வாடகைச் செலவு எதுவுமில்லை. அனைத்துச் செலவுகளும் போக மாதத்திற்கு சராசரியாக 2.35 லட்ச ரூபாய் நிகர லாபமும், ஆண்டிற்குச் சுமார் 28.5 லட்ச ரூபாய் லாபமும் அவருக்குக் கிடைக்கிறது. இக்கதை இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.





