“ரூ.33 லட்சம் சம்பள வேலையை விட்ட ஐடி ஊழியர்!” – நிம்மதிக்காக எடுத்த அதிரடி முடிவு வைரல்!

இன்றைய ஐடி துறையில் ஓயாத வேலைப்பளு, இலக்குகளை அடைவதற்கான மன அழுத்தம் மற்றும் நிறுவனங்களின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில், தனது தனிப்பட்ட மன நிம்மதிக்காக ஆண்டுக்கு 33 லட்ச ரூபாய் சம்பளம் தந்த வேலையை ஒரே நாளில் ராஜினாமா செய்த ஐடி ஊழியர் ஒருவரின் கதை சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் சம்பள உயர்வுக்காக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், சம்பளம் குறைவாக இருந்தாலும் நிம்மதியே பிரதானம் என நிரூபித்துள்ள இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாணேஷ் மாலி (Vanesh Mali) என்ற தொழில்முனைவோர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் தனது நண்பரான ஐடி ஊழியரின் இந்த கதையைப் பகிர்ந்துள்ளார். அந்த நபர் தினமும் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரியும் (Work from Office) பிரிவில் ஆண்டுக்கு 33 லட்ச ரூபாய் (CTC ₹33 LPA) ஊதியத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மிகக் கடுமையான பணிச்சுமை காரணமாக அவர் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். மாற்று வேலைக்குச் செல்ல முயன்ற போதும், தினமும் அலுவலகப் பணிக்கு இடையே நேர்காணல்களுக்குத் தயாராக நேரமில்லாமலும், 2 மாதங்கள் வரையிலான நீண்ட நோட்டீஸ் பீரியட் (Notice Period) காரணத்தினாலும் பிற நிறுவனங்களில் அவரால் இணைய முடியவில்லை.

நிறுவனங்கள் உடனடியாக வேலையில் சேருபவர்களையே எதிர்பார்த்ததால், இனி தாமதித்தால் தனது நிம்மதியும் உடல்நலனும் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அந்த ஊழியர், கையில் வேறு எந்த புதிய வேலை வாய்ப்பும் இல்லாத நிலையிலும் தனது வேலையை தைரியமாக ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பிறகு, எந்தவொரு வேலைத் தேடலிலும் ஈடுபடாமல் 5 நாட்கள் தனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் முழுமையாக நேரத்தைச் செலவிட்டுத் தனது மன அழுத்தத்தைக் குறைத்துக் கொண்டார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இந்தியாவிற்கு தனி ரூல்புக் இருக்கு!" - போலந்து பெண் பகிர்ந்த 15 சுவாரசிய விஷயங்கள் வைரல்!

அதன்பின்னர், மிகவும் திட்டமிட்டுத் தனது சுயவிவரக் குறிப்பை (Resume) தயார் செய்து, விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் 3 நிறுவனங்கள் அவரை நிராகரித்த போதிலும், 4-வதாக விண்ணப்பித்த நிறுவனம் அவருக்குப் பணி நியமனக் கடிதத்தை வழங்கியது. ஆனால், அந்த புதிய வேலையின் ஆண்டுச் சம்பளம் 29 லட்ச ரூபாய் மட்டுமே. அதாவது முந்தைய வேலையை விட 4 லட்ச ரூபாய் குறைவாகும். இருப்பினும், அது முற்றிலும் வீட்டில் இருந்தே பணிபுரியும் (Work from Home) வசதி கொண்ட வேலை என்பதால், எந்தவித யோசனையுமன்றி அந்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

“நான் எடுத்த முடிவு எனக்குச் சரியெனப்பட்டது, இப்போது நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்” என்று அந்த ஐடி ஊழியர் கூறியதாக வாணேஷ் மாலி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். “பணம் மட்டுமே வாழ்க்கையல்ல, மன நிம்மதிதான் முக்கியம்” என்று சிலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவசரப்பட்டு வேலையை விடுவது தற்போதைய சந்தை சூழலில் ஆபத்தானது என்றும் சிலர் எச்சரித்து கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.