“ஸ்மார்ட்போன் மனிதர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை!” – Gen Z, Boomers பெயர்கள் உருவான சுவாரஸ்ய வரலாறு!

சமீபத்திய ஆண்டுகளில் தெற்காசிய நாடுகளான இலங்கை, பங்க்ளாதேஷ், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு மக்கள் போராட்டங்களின் முன்னணியில் நின்று களமாடியது ‘ஜென் ஜி’ (Gen Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறைதான். 1997 முதல் 2012 வரை பிறந்தவர்களைக் குறிக்கப் பயன்படும் இந்த வார்த்தை, வெறும் மீம்களையும் சமூக வலைதளங்களையும் மட்டுமே விரும்பிப் பயன்படுத்தும் கூட்டமாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று உலக அளவில் பெரும் அரசியல் மாற்றங்களையும், அரசாங்கங்களுக்கான அச்சுறுத்தல்களையும் உருவாக்கும் முதன்மைச் சக்தியாக இவர்கள் உருவெடுத்துள்ளனர். இந்தச் சூழலில், மனித சமுதாயத்தை பூமர், மில்லினியல், ஜென் ஜி எனப் பல தலைமுறைகளாகப் பிரிக்கும் பெயர்கள் எவ்வாறு உருவாயின என்பதும், அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்களும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன.

காராஜ் முதலாளி முதல் எழுத்தாளர்கள் வரை: தொடக்க காலப் பெயர்கள்

சமூகத்தைத் தலைமுறைகளாகப் பிரிக்கும் கோட்பாடு சுமார் 150 ஆண்டுகள் பழமையானது என்றாலும், ஜெர்மன் சமூகவியலாளர் கார்ல் மேன்ஹைம் (Karl Mannheim) 1927-இல் எழுதிய கட்டுரைதான் நவீன தலைமுறைக் கோட்பாட்டிற்கு அடித்தளமிட்டது. ஒரு தலைமுறை என்பது பிறப்பு ஆண்டால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாகப் போர் அல்லது பொருளாதாரச் சீரழிவு போன்ற வரலாற்றுச் சம்பவங்களால் உருவாக்கப்படும் கூட்டு அனுபவமே அவர்களைத் தீர்மானிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதில் ‘தி லாஸ்ட் ஜெனரேஷன்’ (1883-1900) என்ற பெயர் முதலாம் உலகப் போரின்போது ஒரு பிரெஞ்சு காராஜ் முதலாளி தனது இளம் மெக்கானிக்கைக் திட்டியபோது உருவானது. அதைக்கேட்ட அமெரிக்க எழுத்தாளர் கெர்ட்ரூட் ஸ்டைன், எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே மற்றும் அவரது நண்பர்களைக் குறிப்பிட அந்தப் வார்த்தையைப் பயன்படுத்தினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "இலான் மாஸ்க்கின் Grok AI-க்கு செக்!" – ஆபாச போலி பட உருவாக்கத்திற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு!

அதன் பின்னர், 1928 முதல் 1945 வரை பிறந்தவர்களைப் பெரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உலகப்போரின் மௌன சாட்சிகளாக இருந்ததால் ‘சைலன்ட் ஜெனரேஷன்’ என டைம் பத்திரிகை பெயரிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கப் படைவீரர்கள் வீடு திரும்பியதைத் தொடர்ந்து 1946 முதல் 1964 வரை பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்ததால், அந்தத் தலைமுறையினர் புள்ளியியல் கணக்கீட்டின் அடிப்படையில் ‘பேபி பூமர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

பங்க் கலைஞர் தந்த ‘ஜென் எக்ஸ்’ மற்றும் கணிதத்தின் அடிப்படையில் பிறந்த ‘மில்லினியல்கள்’

1960-களில் லண்டன் டீனேஜர்களை நேர்காணல் செய்து வெளியான ஒரு புத்தகத்தின் தலைப்பான ‘ஜெனரேஷன் எக்ஸ்’ என்ற பெயர், 1976-இல் ‘பங்க்’ இசைக்கலைஞர் பில்லி ஐடால் (Billy Idol) தனது இசைக்குழுவிற்கு அந்தப் பெயரை வைத்த பிறகே பிரபலமடைந்தது. பின்னர் 1991-இல் நாவலாசிரியர் டக்ளஸ் கூப்லேண்ட் எழுதிய புத்தகத்தின் மூலம் ‘ஜென் எக்ஸ்’ உலகளாவிய பெயராக நிலைபெற்றது. அதேபோல, 1982-இல் பிறந்து 2000-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடிக்கும் குழந்தைகளைக் கணிதக் கணக்கீட்டின் அடிப்படையில் வில்லியம் ரவுஸ் மற்றும் நீல் ஹோவ் ஆகிய எழுத்தாளர்கள் ‘மில்லினியல்கள்’ எனப் பெயரிட்டனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  157 பேர் பலியான கொடூர போயிங் விபத்து: 5 ஆண்டுகள் கழித்து வெளியான அதிரடி தீர்ப்பு... ரூ.276 கோடி இழப்பீடு!

எந்த எழுத்தாளரும் இல்லாத ‘ஜென் ஜி’

மில்லினியல்களுக்கு அடுத்ததாக வந்த தலைமுறைக்கு எந்தவொரு குறிப்பிட்ட எழுத்தாளரோ அல்லது அறிஞரோ பெயரிடவில்லை என்பதுதான் இதன் ஆகப்பெரிய சிறப்பு. ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் ‘Y’ எழுத்துக்கு அடுத்து ‘Z’ வருவதால் இயல்பாகவே இவர்கள் ‘ஜென் ஜி’ என்று அழைக்கப்பட்டனர். அமெரிக்க கலாச்சாரத்தைச் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தலைமுறைப் பெயர்கள், உலகமயமாக்கல் மற்றும் இணையத்தின் வளர்ச்சியால் இன்று இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளின் கலாச்சாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் முதன்மை அடையாளங்களாக மாறியுள்ளன.