தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிரடியை ஏற்படுத்தும் வகையில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் மாண்புமிகு ஆளுநர் அவர்களை ராஜ் பவனில் நேரில் சந்தித்துப் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், கவர்னருடன் பேசியது என்ன..? என்ற கேள்வி முதன்மையாக முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தற்போதைய தவெக அரசின் கீழ் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், சட்டம் ஒழுங்கும் எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் ஆளுநரிடம் கொட்டித் தீர்த்துள்ளதாகத் தெரிவித்தார். தவெக ஆட்சியில் அரங்கேறி வரும் தொடர் குற்றங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியல் போட்டு அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
புதிய தவெக அரசு பொறுப்பேற்று வெறும் 54 நாட்களே ஆகியுள்ள நிலையில், அதற்குள் ஒட்டுமொத்த தமிழகமும் குற்றங்களின் புகலிடமாக மாறியுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். இந்த 54 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 151 கற்பழிப்பு சம்பவங்களும், 85-க்கும் மேற்பட்ட கொடூரப் படுகொலைகளும், 80-க்கும் மேற்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாகப் பகிரங்கமான குற்றப் பட்டியலை அவர் வாசித்தார். பெரம்பூரில் 3 வயதுக் குழந்தைக்கு நடந்த கொடூரமான வன்கொடுமைச் சம்பவம் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியில் நடந்த அராஜகங்களைச் சுட்டிக்காட்டிய அவர், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பொறுப்புள்ள நிர்வாகிகளே பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில் பெண்களுக்குக் கேலி வதந்திகளை உருவாக்குவதாகச் சாடினார். தங்களது விளம்பரங்களுக்குத் தாராளமாக “வெள்ளை அறிக்கை” வெளியிடும் தவெக அரசு, இத்தனை கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் குறித்து இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது குறித்த உண்மை அறிக்கையை ஏன் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று காரசாரமாகக் கேட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு மட்டுமன்றி, தவெக அரசின் அமைச்சரவை (கேபினெட்) கூட்டத்தில் நிகழ்ந்த அப்பட்டமான ரகசிய காப்பு விதிமீறலையும் ஆளுநரின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளார். எந்தவித அதிகாரப்பூர்வ அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு தனி நபர்கள் தவெக கேபினெட் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்ற அதிரடிப் புகாரை முன்வைத்தார். ரகசிய காப்பு பிரமாண விதிகளுக்குப் புறம்பாக கார்ப்பரேட் பாணியில் இந்த வெளிநபர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 167-ன் படி மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளதை நினைவு கூர்ந்த நயினார் நாகேந்திரன், தவெக அரசு மக்களின் பாதுகாப்பிலும், நிர்வாகத்திலும் காட்டி வரும் மெத்தனப் போக்கை ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளதால், அடுத்தகட்டமாகப் பெரும் சட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிவித்தார்.





