நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த போலீஸ்.. தம்பியைத் தொட்டா சும்மா இருக்க மாட்டோம்! தவெக அரசை எச்சரித்த திமுக பிரமுகர்!: “மாற்றம்கிறது இதுதானா?” சைதாப்பேட்டை கனி தாக்குதல் முதல் ராயக்கோட்டை கைது முயற்சி வரை கொதித்தெழுந்த கழகம்!

தமிழகத்தில் ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுகவின் இளைஞரணி நிர்வாகிகளைக் குறிவைத்துத் தவெக அரசு அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறி திமுக தரப்பில் இருந்து மிகக் கடுமையான கண்டனங்களும் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த முக்கிய நிர்வாகியான தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குத் திமுக தரப்பில் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் தவெக அரசின் சீர்கேடுகள் குறித்துப் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க.வினர் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தம்பி கனியைத் தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, மாறாகச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளது. கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் – அரசையும் எதிர்த்துப் பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் தவெக அரசு சொன்ன மாற்றமா?

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கஜானாவில் எவ்வளவு நிதி?: "டாஸ்மாக், மைனிங்கில் பெரும் ஊழல்; இதான் கஜானா காலிக்கு காரணம்!" நிதி அமைச்சர் மரியா வில்சன் வெளியிட்ட பகிரங்க வெள்ளை அறிக்கை!

நிர்வாகத்திறனற்ற இந்த #SofaModel (சோபா மாடல்) அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். கழக இளைஞர்களைக் காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது” என்று ஆளும் தவெக அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.