உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் (Jaunpur) நடைபெற்ற காவலர் ஆட்சேர்ப்பு தேர்வில், முறைகேடுகளைத் தடுப்பதாகக் கூறி பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை தற்பொழுது மனித கண்ணியத்தையும், பொது சுகாதாரத்தையும் முற்றிலும் குப்பைத் தொட்டியில் வீசும் வகையில் மிகப்பெரிய சர்வதேச அளவிலான விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது. ஜான்பூரில் உள்ள சாஜிதா கேர்ள்ஸ் இன்டர் காலேஜ் தேர்வு மையத்தில் அரங்கேறிய இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்பொழுது வெளியாகி நெட்டிசன்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
மாநிலத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட தேர்வில் சில மையங்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது அண்டர்வேர் மற்றும் ஆடைகளின் அந்தரங்கப் பகுதிகளுக்குள் மொபைல் போன்கள் மற்றும் ப்ளூடூத் கருவிகளை மறைத்து வைத்துக் கடத்த முயன்றதாகக் கூறி அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக ஜான்பூர் மையத்தில் இருந்த அதிகாரிகள், தேர்வு எழுத வந்த ஒரு இளைஞரின் ஜீன்ஸ் பேண்டின் உள்பகுதி மற்றும் அண்டர்வேர் பகுதி வரை கைப்பிடி மெட்டல் டிடெக்டரை நுழைத்து மிகத் தீவிரமாகப் பரிசோதனை செய்துள்ளனர்.
அறிவியலின் உச்சகட்ட சோதனையாக, ஆடைகளின் உள்பகுதிகளில் நுழைக்கப்பட்ட அதே மெட்டல் டிடெக்டரை துடைக்கவோ அல்லது கிருமிநாசினி செய்யவோ கூடத் தோன்றாமல், அடுத்த நொடியே அந்தத் தேர்வரின் வாயைத் திறக்கச் சொல்லி அவரது வாய்க்குள் முழுமையாக நுழைத்து பரிசோதனை செய்துள்ளனர். ஒருவேளை தேர்வர்கள் மொபைல் போனையே விழுங்கிவிட்டு உள்ளே செல்கிறார்களோ என்ற அதீத கற்பனையில் அதிகாரிகள் இந்த விசித்திர சோதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த அநாகரிகமான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “ஒருவேளை அமெரிக்க ரகசிய உளவுப்படை இந்த ஜான்பூர் போலீஸிடம் டியூஷன் படித்திருந்தால் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சிகளை முன்பே தடுத்திருக்கலாம்” என்று உச்சகட்ட நையாண்டியுடன் சாடி வருகின்றனர். வேலை தேடி வரும் இளைஞர்களை இவ்வளவு கேவலமாகவும், மனிதநேயமற்றும் நடத்துவதா என்றும், ஆடைகளின் உள்பகுதியில் வைக்கப்பட்ட ஒரு கருவியை நேரடியாக வாய்க்குள் வைப்பது மிகக் கடுமையான தொற்று நோய்களைப் பரப்பும் ஒரு கொடூரமான சுகாதார சீர்கேடு என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களையும் ஆத்திரத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.





