“தேர்தலுக்கு முன்னாடி ரஞ்சிதமே பாட்டு! இப்ப சட்டம் ஒழுங்கு சீர்கேடு!”: முதல்வர் விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன்! “அடிமட்டத்திலேயே ஆரம்பிச்சிருச்சு ஊழல்!” தவெக மாவட்ட செயலாளர்கள் மீது பார் மாமூல் புகார்! பாஜகா மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலவரம், போதைப்பொருள் புழக்கம் மற்றும் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துத் தவெக அரசு மற்றும் முதலமைச்சர் சா. ஜோசப் விஜய் மீது அடுக்கடுக்கான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “தேர்தலுக்கு முன்னால் மேடைக்கு மேடை ஏறி, பேருந்து மீது நின்று, சினிமாவில் வரும் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ போன்ற பரபரப்பான பாடல்களுக்கு ஆடிப்பாடி வாக்குச் சேகரித்தார்கள். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் ஏகப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு சிலிண்டரையும் காணோம், சொன்ன பணத்தையும் காணோம். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல் முதலமைச்சர் அமைதி காக்கிறார். நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சொன்ன வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 207 கடுமையான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 40-க்கும் மேற்பட்ட கற்பழிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. மூன்று வயதுக் குழந்தையைக் கூட இந்த சமூக விரோதிகள் விட்டுவைக்கவில்லை. திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலுமே அடுத்தடுத்து கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் வீதிக்கு வீதி அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழக மக்கள் தற்பொழுது யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறுவது, மாநிலத்தில் போதைப்பொருள் தாராளமாகப் புழங்குவதை அவர்களே ஒப்புக்கொள்வது போல உள்ளது. நிர்வாகக் குறைபாடுகளைச் சரிசெய்ய அரசுக்குக் கூடுதல் அவகாசம் தரலாம், ஆனால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஒரு மணி நேரம் கூட அவகாசம் தர முடியாது; முதல்வர் உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  968 நாட்கள் காத்திருப்புக்கு மரண மாஸ் எண்ட்ரி! இங்கிலாந்து மண்ணில் ஜடேஜா சாதனையை தவிடு பொடியாக்கிய பும்ரா!

மேலும், தமிழக வெற்றி கழகத்தினர் அடிமட்டத்திலிருந்தே தற்பொழுது ஊழல் மற்றும் மாமூல் வசூலில் இறங்கியுள்ளனர். திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் புகுந்து தவெக மாவட்டச் செயலாளரின் பெயரைச் சொல்லி மாமூல் கேட்டு மிரட்டிய சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்பொழுது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பின்னர், அது தனது ஜூனியர் இல்லை என்று மாவட்டச் செயலாளர் மழுப்புகிறார். தமிழ்நாடு முழுவதும் பார் வசூல்களும், அமைச்சர்களின் முறைகேடான திட்டங்களும் தடையின்றி நடந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, மாற்றுக்கட்சி நிர்வாகிகளைத் தவெக விலைக்கு வாங்கும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறது” என்று நயினார் நாகேந்திரன் மிகவும் காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.