சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் உயர்மட்ட மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்து முதல்வர் விஜய் ஒன்பது பக்கங்கள் கொண்ட மிக நீண்ட, அதிரடியான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த உரையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு மிக முக்கியமான பல நேரடி உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் அவர் பிறப்பித்துள்ளார்.
முக்கியமாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றங்களை ஒடுக்கும் விவகாரத்தில், தனிநபர்களின் தலையீடு இன்றி அதிகாரிகள் விதிகளுக்கு உட்பட்டு முழு சுதந்திரத்துடன் செயல்படலாம் என்று முதல்வர் விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
“தவறு செய்தவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சம் கூடாது”
மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “மக்கள் வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவாணியமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அதிகாரிகள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் பாரபட்சம் இன்றி சட்டப்படியான துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டு விடக்கூடாது” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் நேரடியாகக் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டும் என்றும், வாரத்தின் மற்ற வேலை நாட்களில் இந்த ஆய்வுகள் தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மனு அளிக்க வரும்போது, அவர்களைத் தங்கள் வீட்டு மனிதர்களைப் போலக் கனிவோடு நடத்தி, குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல் நிலையங்களுக்கு வரும் மக்களை மிகக் கண்ணியத்தோடு நடத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு: ‘நோ சேஞ்ச், நோ காம்ப்ரமைஸ்’
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் தவெக அரசு மிக உறுதியாக இருக்கும் என்று தெரிவித்த முதல்வர் விஜய், “நோ சேஞ்ச், நோ காம்ப்ரமைஸ்” (No Change, No Compromise) என்ற தாரக மந்திரத்தை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போக்சோ மற்றும் போதைப்பொருள் ஒழிப்பில் கடுமையான எச்சரிக்கை: “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதை நான் ஒருபோதும் சகிக்க மாட்டேன். பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் இத்தகைய புகார்களை மறைக்கவோ, தாமதப்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது. அதேபோல், பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனைகளை நடத்தி, போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.”
நிலத் தகராறுகளுக்குத் தீர்வு மற்றும் இதர உத்தரவுகள்
பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு நிலத் தகராறுகளே முதன்மைக் காரணமாக அமைகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘நில வழக்கு தீர்வு குழு’ இரண்டு வார இடைவெளியில் கட்டாயம் கூட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கள்ளச்சாராயத் தடுப்புப் பணிகளில் காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும், மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைக் கண்காணித்துக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் சாதியை ஊக்குவிக்கும் சம்பவங்களைக் கல்வித்துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தனது 9 பக்க உரையில் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.