ஜார்க்கண்ட் மாநிலம் க்காண்டி மற்றும் கார்வா பகுதியில், ‘ஜென் ஆல்பா’ தலைமுறை மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர் மலய் சிங்கின் இடமாற்றத்தை எதிர்த்து நடத்திய அதிரடிப் போராட்டம் அரசு நிர்வாகத்தையும் கல்வித்துறையையும் அதிர வைத்துள்ளது. இறுதியில் மாணவர்களின் கோரிக்கை ஏற்று, அவரது இடமாற்றம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் க்காண்டி உயர்நிலைப் பள்ளியிலேயே அவர் பணியாற்ற உள்ளார்.
கடுமையான புழுக்கம் மற்றும் உடல்நலக் குறைவு போன்ற எதையும் பொருட்படுத்தாமல், மாணவர்கள் அதிகாலையிலேயே பள்ளியின் முன்பு திரண்டனர். கைகளில் பதாகைகளுடன் ஒரே கோஷத்தை எழுப்பிய அவர்கள், “எங்களுக்கு மலய் சார் வேண்டும்” என்று முழக்கமிட்டனர். சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களது ஆசிரியரை மீண்டும் பணியமர்த்தும் வரை எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மாணவர்கள் கூறுகையில், மலய் சிங் வெறும் ஆசிரியர் மட்டுமல்ல, தங்களின் உண்மையான வழிகாட்டி என்று உருக்கமாகத் தெரிவித்தனர். அவரது திடீர் இடமாற்றத்தால் மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் கூறிய அவர்கள், பெருமளவில் திரண்டு வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் குதித்தனர். இந்த மாணவர் போராட்டம் மறியல் நிலையிலிருந்து காவல் நிலையப் பகுதி வரை பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் பொதுப் பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் நிலைமையை மேலும் தீவிரமாக்கியது. மாணவர்களின் விடாப்பிடியான போராட்டத்திற்குப் பிறகு, கல்வித்துறை பணிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிலையில், மலய் சிங்கின் இடமாற்றம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.





