“750 கோடி மாணவர்கள்!” – பிரியங்கா காந்தியின் சர்ச்சைப் பேச்சால் கிண்டலடிக்கும் பாஜக!

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா (Anti-paper leak bill) மீதான விவாதத்தின் போது, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி தெரிவித்த ஒரு புள்ளிவிவரம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையையும் கிண்டலையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதனால் “750 கோடி மாணவர்கள்” பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியது பாஜகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையே சுமார் 145 முதல் 147 கோடிக்குள் இருக்கும் நிலையில், அதைவிடப் பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறியது அடிப்படை அறிவுக்கே முரணானது என பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

பாஜகவின் கடுமையான விமர்சனங்கள்: பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா தனது எக்ஸ் (X) தளத்தில், “அசல் ‘பப்பு’ மகாஷயருக்குப் பிறகு, இப்போது ‘பப்புவின் பதிப்பு 2.0’ (Pappu version 2.0) வந்துவிட்டது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையே 147 கோடிதான், இதில் 750 கோடி மாணவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” என்று நக்கலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா, “140 கோடி மக்கள் கொண்ட நாட்டில், 750 கோடி மாணவர்கள் இருப்பதாகப் பிரியங்கா காந்தி நம்புகிறார். 2024 தேர்தலுக்கு முன்னால், ராகுல் காந்தி ‘பப்பு’ இல்லை என்று வாதிட்டவர், இப்போது இப்படி ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறைச் செய்துள்ளார். இவரை யாரால் காப்பாற்ற முடியும்?” என்று சாடியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இது சன் டிவியோ, விஜய் டிவியோ கிடையாது!" தவெக கூட்டணி விவகாரத்தில் திருமாவை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!

பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரியும், “ராகுல் காந்திக்கு இணையாக அறிவுத்திறனில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்” என்று கிண்டல் செய்துள்ளார்.

மத்திய அமைச்சரின் பதிலடி: மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பிரியங்கா காந்தியின் கருத்து உலக மக்கள் தொகையை விட அதிகம் என்று சுட்டிக்காட்டினார். “இந்தக் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இது அறியாமை அல்லது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனம். உலகின் மொத்த மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையை அவர் குறிப்பிடுவது எப்படிச் சாத்தியம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பிரியங்கா காந்தியின் இந்தத் தவறு, எதிர்க்கட்சிகளின் வாதங்களுக்குப் பதிலாக, ஆளும் கட்சியினருக்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ்களையும் விமர்சனங்களையும் உருவாக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது. முறையான தரவுகளைச் சரிபார்க்காமல் நாடாளுமன்றத்தில் பேசியது எதிர்க்கட்சியின் நம்பகத்தன்மை மீதான கேள்வியாக மாறியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.