யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு! மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் யுபிஐ (UPI) எனப்படும் ஒருங்கிணைந்த செலுத்தல் இடைமுகம் வாயிலாக மேற்கொள்ளப்படும் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் வகையிலான சூழலை மத்திய அரசு அமைதியாக உருவாக்கி வருகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். 2026-ஆம் ஆண்டின் வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதாவின் கீழ், செலுத்தல்கள் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய அறிவிக்கையே இதற்குக் காரணம் என காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, 2,000 ரூபாய் வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் ரூபே (RuPay) டெபிட் கார்டு பயன்பாட்டிற்கும் எந்தவொரு நேரடி அல்லது மறைமுகக் கட்டணத்தையும் வங்கிகளோ சேவை நிறுவனங்களோ வசூலிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இத்தகைய விலக்கு அளிக்கப்படாததால், எதிர்காலத்தில் வணிகர்களுக்கான ‘மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட்’ (MDR) கட்டணத்தை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு வழிவகை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பவன் கேரா ஆகியோரும் விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “எண்ணிக்கை அடிப்படையில் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் 5 சதவீதம் மட்டுமே என்றாலும், ஒட்டுமொத்த பணமதிப்பில் அவை 65 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. வாடிக்கையாளர்களிடம் நேரடியாகக் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு கூறினாலும், கடைக்காரர்கள் மீது விதிக்கப்படும் கட்டணம் இறுதியில் நுகர்வோரின் தலையில்தான் சுமத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்கப் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, இந்தியாவின் பூஜ்ஜிய-எம்டிஆர் (Zero-MDR) கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தளர்த்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  National Survey Next PM : "அடுத்த பிரதமர் யார்?" - தேசிய அளவில் 3-வது இடத்தை பிடித்த விஜய்: கருத்துக் கணிப்பு முடிவுகளால் பரபரப்பு!

இக்குற்றச்சாட்டுகளுக்கு நடுவே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அளித்த விளக்கத்தில், இந்தச் சட்டத் திருத்தம் என்பது ஒரு வாய்ப்பளிக்கும் வழிவகை மட்டுமே என்றும், சாதாரணக் கடைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இதன் மூலம் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், இதுகுறித்து தேசிய செலுத்தல் கழகத்தின் (NPCI) கீழ் இயங்கும் யுபிஐ வழிகாட்டுதல் குழுவே இறுதி முடிவெடுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.