காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனுஸ்மிருதி மற்றும் அதன் சிந்தனை முறைகள் குறித்து விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்திக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பில் இருக்கும் ராகுல் காந்திக்கு அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் நாட்டின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மதித்து நடக்கவும் கடமை உள்ளது” என்று சுட்டிக்காட்டினார். மேலும், நாட்டின் பழம்பெரும் பெருமைகளையும் மரபுகளையும் தூற்றுவதையே ராகுல் காந்தி தனது பிறப்புரிமையாகக் நினைப்பதாக சாடியுள்ளார்.
மனுஸ்மிருதி மற்றும் இந்திய நூல்கள் குறித்து ராகுல் காந்தி பேசும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “மனு மற்றும் இந்தியப் பாரம்பரியத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் அதர்வவேதம், சதபத பிராமணம் மற்றும் மத்சய புராணம் போன்ற புனித நூல்களைப் படிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையை விமர்சித்த யோகி ஆதித்யநாத், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் இருப்பை எப்போதும் காங்கிரஸ் கேள்வி கேட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், ‘நகர்ப்புற நக்சல்களின்’ கைகளில் நாட்டின் தற்போதைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சீரழிக்க முயற்சிப்பதாக ராகுல் காந்தி மீது யோகி ஆதித்யநாத் சரமாரி புகார்களைப் பொழிந்துள்ளார்.





