பண்டிகைக் காலத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமானக் கட்டணங்களை அளவுக்கு அதிகமாக உயர்த்துவதைக் கட்டுப்படுத்தக் கோரிய அவசர மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது கட்டணம் 700% வரை உயர்ந்துள்ளதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதற்கு, “அப்படியானால் விமானத்தில் பயணிக்காதீர்கள்!” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வாய்மொழியாகக் கருத்து தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதம்
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த விவகாரம் அவசரக் குறிப்பிடுதலாகக் கொண்டுவரப்பட்டது.
-
வழக்கறிஞர் வாதம்: “பண்டிகைக் காலத்தில் விமானக் கட்டணம் 700 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விமானப் பயணம் என்பது ஓர் அத்தியாவசிய சேவையாகும். இந்த அளவுக்குக் கட்டணத்தை உயர்த்துவது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 வழங்கும் சமத்துவ உரிமைக்கு எதிரான மீறலாகும்” என வாதாடினார்.
-
நீதிமன்றத்தின் பதில்: “அப்படியென்றால் விமானத்தில் செல்வதைத் தவிருங்கள்” என்று கூறி, வழக்கின் அவசர விசாரணையை ஏற்க அமர்வு மறுத்துவிட்டது.
மத்திய அரசின் புதிய விதிமுறைகள்
விமானக் கட்டணங்களின் “கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்கள்” மற்றும் பண்டிகைக் காலங்களில் பயணிகளிடம் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களைக் கட்டுப்படுத்தக் கோரி, சமூக ஆர்வலர் எஸ். இலட்சுமிநாராயணன் தாக்கல் செய்த வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வழக்கில் ‘பாரதிய வாயுயான் அதிநியம், 2024’ (Bharatiya Vayuyan Adhiniyam, 2024) சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து, அவ்விதிகளின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு மீண்டும் நவம்பர் 16-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தற்போதைக்குக் கட்டண உயர்வுக்கு எதிரான உடனடி அவசர மனுவைத் தனித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.