திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் மீது தொடரப்பட்ட 20 ஆண்டு கால சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி, சகோதரர் மற்றும் மகன்கள் உட்பட குடும்பத்தினர் 6 பேரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டார்.
20 ஆண்டுகால வழக்கின் பின்னணி
கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராகப் பணியாற்றியவர் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, 2006-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு விசாரணைகளும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், வழக்கு முடிவு நிலையை எட்டியது.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதிய அமர்வுக்குப் பிறகு பிற்பகல் 4 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பிற்பகல் 4 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் மகன்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். குற்றச்சாட்டுகள் எதுவும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். 20 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்த விடுதலை கிடைத்துள்ளது குறித்துத் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.